Published:Updated:

`மாயமான 4.5 லட்சம் கழிப்பறைகள்; ரூ.540 கோடி என்னவானது?’ - விழிபிதுங்கி நிற்கும் அதிகாரிகள்

Representation Image
Representation Image

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மத்தியப்பிரதேசத்தில் நடந்த ஊழல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

`ஊழல்களை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்துதான் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. மோடி அரசு ஊழல்களை ஒழித்ததா? இல்லையா? என்ற விவாதத்தைப் பின்னர் வைத்துக்கொள்ளலாம். பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டத்திலே ஊழல் செய்துள்ளனர் நம்மாட்கள். தூய்மை இந்தியா திட்டம் குறித்து அமெரிக்காவில் உரை நிகழ்த்தி வந்தார் மோடி.

இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளைக் காணவில்லை என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மத்தியப்பிரதேச அதிகாரிகள். தவறு எங்கு நடந்தது என விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 4.5 லட்சம் கழிவறைகளைக் கட்ட ரூ.540 கோடி செலவானதாக கணக்கில் உள்ளது. ஆனால், 4.5 லட்சம் கழிவறைகளைக் காணவில்லை. இந்த ரூ.540 கோடி என்னவானது என விசாரணையில் இறங்கியுள்ளனர் அம்மாநில அதிகாரிகள்.

தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டம்

2012-ம் ஆண்டு அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இங்கு கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2012- 2018 ஆம் ஆண்டுகளில் மாநிலத்தில் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பயனாளர்களுக்கு தலா ரூ.12,000 வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசு ரூ.540 கோடி நிதி வழங்கியுள்ளது. இதையடுத்து, கழிவறைகள் கட்டப்பட்டது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில்தான் கழிவறைகள் கட்டப்படாததும் அந்தத் தொகைகள் வேறுபயன்பாட்டுக்குச் செலவழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. சில பழங்குடியின கிராம மக்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பியதையடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிராம மக்களின் பெயர்களில் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

Lakkadjam பஞ்சாயத்தில்தான் முதன்முறையாக இந்தப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.7 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மாநில அரசானது 300 அதிகாரிகளை நியமித்து இந்தக் கழிவறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளது.

மணல் சிற்பம்
மணல் சிற்பம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் இந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கழிவறைகள் கட்ட அரசு அளித்த பணத்தை மற்ற வேலைகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

`6 மாதங்களாக வேலை இல்லை, மனஅழுத்தம்!'- குழந்தைகளோடு விபரீத முடிவெடுத்த தந்தை

ஸ்வச் பாரத் திட்டத்தின் மத்தியப்பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி பேசுகையில், ``2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் மாநிலத்தில் கழிவறைகள் இல்லாத 62 லட்ச குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதியுடன் கழிவறை கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. உண்மையில் கழிவறைகள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய 2000 தன்னார்வலர்களின் உதவியுடன் கணக்கெடுப்பை நடத்தினோம்.

தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டம்

இந்தக் கணக்கெடுப்பில் சுமார் 4.5 லட்சம் கழிப்பறைகளைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் எங்களுக்குக் கிடைத்தது. மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இரண்டு வழிகளில் பயனாளர்களுக்குப் பணத்தை அளித்துள்ளோம். கழிவறைகள் கட்டப்பட்டதா என சரி பார்த்தபின்பு பஞ்சாயத்துகள் மூலம் பணத்தை வழங்குவது இல்லையென்றால் பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் அரசாங்கமே செலுத்துவது. எங்கள் தரவுகளின்படி பயனாளர்களுக்குப் பணம் சென்றடைந்துவிட்டது. அதை அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். காணாமல் போன கழிவறைகளுக்குச் சம்பந்தப்பட்ட மக்கள் தான் பொறுப்பு” என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு