Published:Updated:

`சீனப் பட்டாசை வைத்திருந்தாலோ, விற்றாலோ 2 வருடச் சிறை!’ - மத்தியப்பிரதேச அரசு அதிரடி

சீன பட்டாசு
சீன பட்டாசு

தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, வெடித்தாலோ இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், `சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் வெடிபொருள் சட்டத்தில் (Explosives Act) கீழ் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.

சிவராஜ் சிங் சௌகான்
சிவராஜ் சிங் சௌகான்

மத்தியப்பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட சட்டம் ஒழுங்கு மறு ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்களுக்கு, விற்பனை செய்பவர்களுக்கு. இரண்டாண்டுகளை வரை சிறைத் தண்டனை வழங்கும் `வெடிபொருள் சட்டம் பிரிவு 9 பி’ இந்தாண்டு சீன பட்டாசுகளுக்கும் பொருந்தும் என்று அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சீன பட்டாசு
சீன பட்டாசு

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பதால், சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்வது சட்டவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது.

நாமக்கல்: சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்ட பட்டாசு; திடீர் தீ! - விபத்தில் இருவர் பலி

மேலும், பண்டிகை நாள்களில் தெய்வங்களின் படங்களைக் கொண்ட பட்டாசுகளில் பயன்படுத்தக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ராஜேஷ், ``இது மக்களுக்கான வேண்டுகோள்; தடை இல்லை" என்று கூறியுள்ளார். தெய்வங்களின் படங்கள் கொண்ட பட்டாசுகள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சிவகாசியில் தயாரிக்கப்படும் பல பட்டாசுகள் தெய்வங்களின் படங்களைக் கொண்டுள்ளது. அதற்கு எப்படி தடை விதிக்க முடியும்? என்றும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் இந்து தெய்வங்களின் படங்களைக் கொண்ட பட்டாசுகளை விற்பனை செய்த இஸ்லாமிய வர்த்தகரின் கடையை எரிப்பதாக சில இளைஞர்கள் அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு