Published:Updated:

மத்தியப்பிரதேசத்தில் இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை!- மருத்துவர்கள் சொல்வது என்ன?

மத்தியப்பிரதேசத்தில் இரண்டு தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை
குழந்தை

மத்தியப்பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜஸ்வந்த் அஹிர்வார், பபிதா தம்பதி. இவர்களுக்குக் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பபிதா கர்ப்பமானார். இந்த தம்பதியர் தங்களது முதல் குழந்தைக்காகக் காத்திருந்தனர். 35-வது வாரத்தில் பபிதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரட்டையர்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி வந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிரசவத்தில் இரண்டு தலைகளுடன் ஆண் குழந்தை பிறந்தது. மேலும், மூன்று கைகளுடனும் அக்குழந்தை காணப்பட்டது.

குழந்தை
குழந்தை

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், ``தாயும் குழந்தையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இந்தக் குழந்தைக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகள் உள்ளன. இரண்டு கைகள் நன்கு தெரியும்படி உள்ளது. எனினும் இந்தக் குழந்தைக்கு ஒரு இதயம்தான் காணப்படுகிறது. விதிஷா மாவட்டத்தில் இதுவரை இதுபோன்ற குழந்தை பிறந்ததில்லை. இதுவே முதன்முறை. கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் கரு சரியாக வளராததே பிரச்னைக்குக் காரணமாக அமைகிறது. இதுபோன்ற நிகழ்வு நடப்பது அரிது” என்றார். இதுபோன்ற குழந்தைகள் வளர்ந்து இயல்பான வாழ்க்கை வாழ்வது என்பது கடினமான ஒன்று என்று மருத்துவர்கள் வேதனை தெரிவித்தனர்.