Published:Updated:

`வைரஸ் போராளிகள்; நிர்வாகத்துடன் கைகோத்த போலீஸ்!’ - கொரோனா சங்கிலியை உடைத்து அசத்திய ம.பி நகரம்

கொரோனா - ஜபல்பூர்
கொரோனா - ஜபல்பூர்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்ற நகரம், மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து, கொரோனா சங்கிலியை உடைத்துள்ளது.

‘கொரோனா’ - சமீபகாலமாக இந்தப் பெயரைக் கேட்டாலே பயம் கலந்த எரிச்சல் உண்டாகும். இந்திய மக்களுக்கு மட்டுமல்ல மொத்த மனித குலத்துக்கும் இதே உணர்வுதான் தோன்றும். அந்த அளவுக்கு பல வழிகளில் மக்களை வாட்டிவதைத்து கொடுமைப்படுத்திவருகிறது இந்த வைரஸ். கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-த்தைக் கடந்துவிட்டது. அதேபோல், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 100-ஐ கடந்துவிட்டது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்ற நகர், வெற்றிகரமாக கொரோனா சங்கிலியை உடைத்துள்ளது.

ஜபல்பூர்
ஜபல்பூர்

இந்தியாவைப் பொறுத்தவரை பிப்ரவரி மாத தொடக்கத்தில் முதல்முறையாக கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அலர்ட் செய்யப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். பின்னர், மார்ச் மாதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி, மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு முன்னரே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், மார்ச் மாதம் 15-ம் தேதி வரை மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவைவிட பெரும் பிரச்னை நிலவிவந்தது.

அங்கு, முன்னதாக ஆட்சிசெய்துவந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் பலம் இழந்தது. கட்சித் தாவல், குதிரை பேரம், நம்பிக்கை வாக்கெடுப்பு என அனைத்தும் முடிந்து ஒருவழியாக மார்ச் 23-ம் தேதி பா.ஜ.க-வின் சிவராஜ்சிங் சவுகான் அம்மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அதற்குள் மார்ச் 20-ம் தேதியே ஜபல்பூரில் முதல் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அதுவும் ஒருவருக்கு இல்லை, ஒரே நேரத்தில் 4 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஜபல்பூர் ஆட்சியர்
ஜபல்பூர் ஆட்சியர்

துபாயிலிருந்து ஜபல்பூர் வந்த நகைக்கடை வியாபாரி, அவரது மனைவி, மகள் ஆகிய 3 பேர் மற்றும் ஜெர்மனியிலிருந்து திரும்பிய ஒரு இளைஞர் என 4 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது உறுதியான உடனேயே, மாநில அரசின் உத்தரவுக்குக் காத்திருக்காத ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம், உடனடியாக நகரின் அனைத்து எல்லைகளையும் பூட்டி, தங்கள் பகுதிக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டது. அதன் பிறகுதான் மாநில அரசு பதவியேற்றுக்கொண்டு மற்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

`கதிகலங்கிய ஸ்பெயின்; தள்ளி நிற்கும் ஸஹாரா!’ - மலைக்கவைக்கும் மலை நகரம் #Corona

ஜபல்பூரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், கொரோனா வைரஸ் போராளிகள் என்ற பெயரில் தன்னார்வ இளைஞர்களைக்கொண்டு தற்காலிக பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. நகரின் அனைத்து இடங்களிலும் சமூக விலகல் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது மட்டும்தான் இவர்களின் ஒரே பணி. காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சிங், ஊரடங்கை மீறும் பொதுமக்கள், வணிகர்களுக்கு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் எச்சரிக்கை அட்டைகள் வழங்க உத்தரவிட்டார். அதிக அட்டை உள்ளவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். மேலும், வீணாக சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜபல்பூர்
ஜபல்பூர்

உணவு, வீடு இல்லாதவர்களுக்கு உடனடியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டன. பல தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கினர். பலர், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கிருமி நாசினி தெளிப்பு போன்ற அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டது மாவட்ட நிர்வாகம்.

அதேபோல், வைரஸ் உறுதியான 4 பேரும் எத்தனை பேருடன் தொடர்பிலிருந்தனர் எனக் கண்டறிய காவலர்கள், உளவுத்துறையினர் அடங்கிய குழுவை அமைத்தார் மாவட்ட ஆட்சியர் பரத் யாதவ். தொடர்ந்து வைரஸ் உறுதியானவர்களுடன் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் தொடர்பிலிருந்தவர்கள் கண்டறியப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து ஜபல்பூர் வந்த சுமார் 600 பேர் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த நகரின் நிர்வாகமும் காவலர்களும் இணைந்து, தங்கள் வேலையை சிறப்பாகச் செய்ததால், அங்கு கொரோனா சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது.

மொத்த மத்தியப்பிரதேசத்திலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக உள்ளது, ஆனால் ஜபல்பூரில் 10 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 12 நாள்களாக அங்கு புது வைரஸ் நோயாளிகள் யாரும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு