Published:Updated:

`சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து கடுமையானதுதான்!' - தேர்தல் ஆணைய வழக்கில் உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

``நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு ஊடகங்களுக்கு முழு உரிமை உண்டு. ஜனநாயகத்தின் உயிர் சக்தியான ஊடகங்களின் செயல்களுக்குத் தடை போட முடியாது."

``தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. தனி மனித இடைவெளி குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அதனால்தான், கொரோனா இரண்டாம் அலை உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம்கூட சுமத்தலாம்" என்று சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்ததை யாருமே மறந்திருக்க முடியாது.

Madras High Court
Madras High Court

கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவுவது தொடர்பாகப் பல வழக்குகள் உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு வழக்கை விசாரித்தபோது தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருந்தது.

தேர்தல் ஆணையம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தக் கண்டனம் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

Election 2021
Election 2021
உயர்நீதிமன்ற நியாயன்மார்களே... நீங்கள் எந்தக் கிரகத்தில் இருக்கிறீர்கள்?

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய கண்டனத்தில் தெரிவித்திருந்த, `` `தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம்கூட சுமத்தலாம்’ என்கிற வார்த்தையை ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. அப்படிச் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் கடுமையானதுதான். எனினும் அது கருத்து மட்டுமே. நீதிமன்றத்தின் உத்தரவு கிடையாது. வழக்குகளில் தங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தும்போது நீதிபதிகள்தாம் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு ஊடகங்களுக்கு முழு உரிமை உண்டு. ஜனநாயகத்தின் உயிர் சக்தியான ஊடகங்களின் செயல்களுக்குத் தடை போட முடியாது" என்றதோடு, தேர்தல் ஆணையத்தின் மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு