மதுரை:`இப்படி ஆகும்னு யாரும் நெனைச்சு பாக்கலியே...’-மாவோயிஸ்டுளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் மரணம்

பாலுச்சாமி 14 ஆண்டுகளாக இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில், நக்சல் தடுப்புப் பிரிவில் வீரராக பணியாற்றிவந்தார். பஞ்சாப், அஸ்ஸாம், ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது,
``இப்பத்தான் ஊருக்கு வந்து பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா இருந்து, சொந்த பந்தத்தை பார்த்துட்டு மறுபடியும் ராணுவத்துக்கு போனாப்ல... இப்படி ஆகும்னு யாரும் நெனைச்சுக்கூடப் பார்க்கலியே...'' என்று ஆற்றாமையுடன் புலம்புகிறார்கள், மதுரை அருகிலுள்ள பொய்கைக்கரைப்பட்டி மக்கள்.

மதுரை மாவட்டம், பொய்கைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலுச்சாமி, நேற்று சத்தீஸ்காரில் தீவிரவாதிளுடன் நடந்த மோதலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி வட்டாரமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
பொய்கைக்கரைப்பட்டி லட்மணனுக்கு நான்கு மகன்கள். மூன்றாவது மகன் பாலுச்சாமி 14 ஆண்டுகளாக இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் நக்சல் தடுப்புப் பிரிவில் வீரராக பணியாற்றிவந்தார். பஞ்சாப், அஸ்ஸாம், ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு சில நாள்களுக்கு முன்புதான் பணிக்குத் திரும்பியிருக்கிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் இரவு வரையிலும் குடும்பத்தினருடன் போனில் மகிழ்ச்சியாகப் பேசிய நிலையில், 24-ம் தேதி காலை மரணமடைந்திருக்கிறார். சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை முன்னேறவிடாமல் தடுக்க முயன்ற வீரர்கள், அவர்களுக்கு எதிராக முன்னேறிச் சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாலுச்சாமி மரணமடைந்திருக்கிறார். அவருடன் இணைந்து போரிட்டு காயமடைந்த சகவீரர் இந்தத் தகவலை பாலுச்சாமியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்திருக்கிறார்.
உடற்கூராய்வு முடிந்து, ராணுவ வீரரின் உடல் பெங்களூரு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக பொய்கைகரைப்பட்டிக்கு கொண்டுவரப்படவிருக்கிறது.

பாலுச்சாமி, வேலையில் ஆர்வமும், சக வீரர்களுடன் அன்பும் கொண்டவர். அதேநேரத்தில், முகத்துக்கு நேரே எதையும் பேசிவிடுகிற நேர்மையான பண்பாளர் என சக வீரர்கள் கூறியுள்ளனர். இவர் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகாமிலுள்ள வீரர்கள் அனைவருமே உணவு உண்ணாமல் கண்ணீர்வடிப்பதாக பாலுச்சாமியின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
மணமாகி இரண்டு வருடங்களிலேயே கணவனை இழந்த அவர் மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்.