Published:Updated:

700 பயணிகளுடன் மும்பை வெள்ளத்தில் சிக்கிய ரயில்! - விரைந்த பேரிடர் மீட்புப்படை

ராம் பிரசாத்

வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய ரயில்
வெள்ளத்தில் சிக்கிய ரயில் ( ANI )

வட இந்தியாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மும்பை மாநகரத்தையும் மழைவிட்டு வைக்கவில்லை. நேற்று மாலை முதலே மும்பை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது.

இந்த நிலையில்தான், மும்பை - கோலாப்பூர் இடையே இயங்கும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிற்கிறது. தண்டவாளம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் ரயிலை இயக்க முடியவில்லை. ரயிலுக்குள் 700 பயணிகள் சிக்கியுள்ளனர். பத்லப்பூர் - வாங்கனி இடையே ரயில் நிற்கிறது. அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படை விரைந்துள்ளது.

காலை 10 மணியளவில் 3 படகுகள் மூலம் மீட்புக்குழுவினர் ரயில் நிற்கும் இடத்தை அடைந்தனர். பயணிகளுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருள்களை வழங்கினர். ரயிலை விட்டு யாரும் கீழே இறங்க வேண்டாம். ரயில் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறது என ரயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மீட்புப்பணிகளில் ஹெலிகாப்டர்கள்
மீட்புப்பணிகளில் ஹெலிகாப்டர்கள்

இந்த மீட்புப்பணியில் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும், 8 படகுகளில் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புக்குழுவினருக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் பத்லப்பூர் ரயில்நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. பயணிகளுக்கான மாற்று ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.