Published:Updated:

`அமித் ஷா தவறான தகவல்களைத் தயாரித்துள்ளார்!’ - மசோதாவுக்கு எதிர்ப்பு; ஐ.பி.எஸ் அதிகாரி ராஜினாமா #CAB

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அப்துர் ரஹ்மான் ஐ.பி.எஸ்
அப்துர் ரஹ்மான் ஐ.பி.எஸ்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் குடியுரிமை மசோதா சட்டமாக இயற்றப்படும்.

அப்துர் ரஹ்மான் ஐ.பி.எஸ்
அப்துர் ரஹ்மான் ஐ.பி.எஸ்

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்குத் தேசிய அளவில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மசோதாவுக்கு அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அங்கு ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

``குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சமத்துவத்துக்காக நம் முன்னோர்கள் நடத்திய போராட்டத்தைக் குடியுரிமை மசோதா சிதைத்துள்ளது. மதச்சார்பற்ற இந்தியாவை மதத்தின் அடிப்படையிலான இந்தியாவாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது” எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், இதே சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தன் பதவியை ராஜினா செய்துள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பட்டியலின மற்றும் இஸ்லாம் மக்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் நான் எனது பணியைத் தொடரப்போவதில்லை, நாளை முதல் அலுவலகத்துக்குச் செல்ல மாட்டேன். இறுதியாக என் பணியை ராஜினாமா செய்கிறேன்.

`சிவசேனா வெளிநடப்பு; 20 வாக்குகள் வித்தியாசம்!' - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் #CAB

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது அதற்காகத் தவறான உண்மைகள், தவறான தகவல்கள் மற்றும் தவறான தர்க்கங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாரித்துள்ளார். இதனால் வரலாறு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றம் இஸ்லாமியர்களுக்கு அச்சத்தைத் தூண்டுவதோடு தேசத்தை பிளவுபடுத்தும்விதமாக உள்ளது.

இது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது. நீதியை நிலைநிறுத்த விரும்பும் அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது அரசியலமைப்பின் அடிப்படை அமைப்புகளுக்கும் எதிரானது.
அப்துர் ரஹ்மான் ஐ.பி.எஸ்

இந்த மசோதா மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. இந்தியாவில் இருக்கும் 200 மில்லியன் இஸ்லாமியர்களைத் துன்புறுத்தும் செயல். சகிப்புத்தன்மையுடனும், மதச் சார்பின்மையுடனும் ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்தியச் சகோதரர்களை இது பிரித்துவிடும். சமூக ஆர்வலர்களும் சட்ட நிபுணர்களும் இந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை மனித உரிமைகள் ஆணையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரலாக செயல்பட்டு வந்தார் ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான். இதற்கு முன்னதாக இந்தியாவில் நடந்த பல்வேறு பிரச்னைகள், நிகழ்வுகளுக்கு இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். மேலும் `மறுப்பு மற்றும் இழப்பு (Denial and Deprivation) - சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, இந்திய முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதிவெளியிட்டுள்ளார். இன்னும் அப்துர் ரஹ்மானின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அப்துர் ரஹ்மான்
அப்துர் ரஹ்மான்

இதற்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் அரசைக் குற்றம்சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார். இவரையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், `பன்முகத் தன்மைகொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது’ எனக் கூறி தன் பணியை ராஜினாமா செய்தார். இவர்களின் வரிசையில் தற்போது ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மானும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.