Published:Updated:

`ஒரு பேருந்துக்கு ரூ.9,000!’ - மகாராஷ்டிரா அரசு பேருந்துகளில் வைரஸ் எதிர்ப்பு ரசாயனம்

மகாராஷ்டிரா அரசு பஸ்
மகாராஷ்டிரா அரசு பஸ்

மகாராஷ்டிரா அரசு பஸ்களில் கொரோனா பரவுவதைத் தடுக்க வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு ரசாயனம் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு பொதுமக்கள் நோய்த் தொற்று பயம் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யத் தயக்கம் காட்டிவருகின்றனர். மும்பையில் புறநகர் பஸ்களிலும் பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால் அச்சத்துடனேயே மக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்துவருகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் பயத்தைப் போக்க மகாராஷ்டிரா சாலைப் போக்குவரத்துக் கழகம் அரசு பஸ்களில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் எதிர்ப்பு ரசாயனத்தைத் தெளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் 10,000 பஸ்களில் ரசாயனம் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசு பஸ்
மகாராஷ்டிரா அரசு பஸ்

ஒவ்வொரு பஸ்ஸுக்கும் ரசாயனம் தெளிக்க ரூ.9,000 செலவாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற ரசாயனம் வழக்கமாக முக்கிய அரசு அலுவலகம் மற்றும் ஏர்லைன்ஸ்களில் தெளிக்கப்படுவது வழக்கம். எனவே இது போன்ற ரசாயனம் தெளிக்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் செயவதிலிருக்கும் அச்சம் நீங்கும் என்று மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக்கழக துணைத் தலைவர் சேகர் தெரிவித்தார்.

பஸ்ஸின் இருக்கைகள், கைப்பிடிகள், ஜன்னல்கள், டிரைவர் கேபின், பஸ்தளம், கதவு போன்ற பகுதிகளில் தெளிக்கப்பட இருக்கிறது. இந்த ரசாயனம் தெளிக்க ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும். ஒரு நிறுவனம் தெளிக்கும் ரசாயனத் தாக்கம் இரண்டு மாதங்களுக்கும், மற்றொரு நிறுவனம் தெளிக்கும் ரசாயனத்தின் ஆயுள் காலம் ஆறு மாதங்களுக்கும் இருக்கும்.

கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு
மாதிரிப் படம்

எனவே ஒரு நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறையும், மற்றொரு நிறுவனம் ஆண்டுக்கு ஆறு முறையும் ரசாயனம் தெளிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்றாவது நிறுவனம் இந்த ரசாயனத் தெளிப்பைச் சோதனை செய்து சான்று வழங்கும். மகாராஷ்டிரா அரசுப் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 18,000 பஸ்கள் இருக்கின்றன. இதில் கொரோனாவுக்கு முன்பு தினமும் 65 லட்சம் பேர் பயணம் செய்தனர். இப்போது தினமும் 18 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு