Published:Updated:

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள்! - முடிவுக்கு வந்த மகாராஷ்டிர அரசியல் சர்ச்சை

மகாராஷ்டிராவில் அமைச்சர்கள் பதவியேற்ற ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்களுக்கு தற்போது இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நீண்ட அரசியல் இழுபறிக்குப் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி சேர்ந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்றபோது அவருடன் சேர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி சார்பில் ஏக்நாத் ஷிண்டே, நிதின் ராவத், சுபாஷ் தேசாய், சாஹன் பூஜ்பால், ஜெயந்த் பாட்டீல், பாலசாஹேப் தோரட் ஆகியோர் மட்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆனால், இவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது.

அஜித் பவார்
அஜித் பவார்

இந்த நிலையில், கடந்த வாரம் மகாராஷ்டிராவின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு என்.சி.பி-யின் மூத்த நிர்வாகியான அஜித் பவார் துணை முதல்வராகவும், உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 36 பேர் அன்றைய தினம் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். பதவியேற்ற மறுநாளே அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அதில் பெரும் சர்ச்சை வெடித்து கூட்டணியில் மோதல் ஏற்பட்டது.

மகாராஷ்டிர அரசை விடாமல் துரத்தும் பதவி மோதல்!- உத்தவ் தாக்கரேவுக்குப் புதிய தலைவலி

கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் அரசின் மிக முக்கியமான நிதி, உள்துறை போன்ற இலாகாக்களுக்குப் போட்டி போட்டனர். தாங்கள் கேட்ட பதவி மற்றும் மரியாதை கிடைக்கவில்லை என்று எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த அனைத்துப் பிரச்னைகளும் முடிவடைந்து ஒருவழியாக இன்று அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த விவரம் மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர் அமைச்சரவைக்கு ஒப்புதலும் அளித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

இலாகாக்கள் ஒதுக்கீடுபடி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்குத் துறையும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்த ஆதித்ய தாக்கரேவுக்கு மகாராஷ்டிராவின் சுற்றுலா மற்றும் ப்ரோட்டாகால் துறை, காங்கிரஸின் அசோக் சாவனுக்கு பொதுப்பணித்துறை, என்.சி.பி-யின் ஜெயந்த் பாட்டீலுக்கு நீர்ப்பாசனம், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட்டுக்கு வருவாய்த் துறையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் தற்போதுதான் அங்கு அமைச்சரவை சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.