மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் வசிக்கும் அப்துல் ஷேக் என்பவர் கொங்கன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அவருடைய கார் புனே அருகிலுள்ள வராந்தா கேட் பகுதியிலுள்ள மலையில் சென்றுகொண்டிருந்தபோது, வக்ஜாய் என்ற இடத்தில் கோயில் அருகே தன் காரை நிறுத்தினார். அங்கு அதிகமான குரங்குகள் இருந்தன. உடனே அந்தக் குரங்குகளுக்கு சாப்பாடு போட்ட அப்துல் ஷேக், அந்தக் குரங்குகளோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள முயன்றார்.
ஆனால், அந்தநேரம் அப்துல் ஷேக் எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இது குறித்து உள்ளூர் மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் மலையேற்றப் பயிற்சியாளர்கள் துணையோடு பள்ளத்தில் விழுந்தவரின் உடலைத் தேடினர்.

போலீஸார் 9 மணி நேரம் போராடி அப்துல் ஷேக் உடலை இறந்த நிலையில் மீட்டனர். ஆசிரியரான அப்துல் ஷேக்கிற்குச் சொந்த ஊர் லாத்தூராகும். அவர் தன்னுடைய குடும்பத்தோடு போர் தாலுகாவிலுள்ள நஸ்ராபூர் என்ற கிராமத்தில் வசித்துவந்தார். அருகிலுள்ள ஒரு துவக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவியும் ஆசிரியராகவே பணியாற்றி வருகிறார். அப்துல் ஷேக் பள்ளத்தில் விழுந்த இடம் மிகவும் அபாயகரமானது. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது எனக் கூறப்படுகிறது. அதோடு, மழைக்காலத்தில் இங்கு அதிகளவில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் விருப்பமான பகுதியாக இருந்துவருகிறது. ஏற்கெனவே மழைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது.