Published:Updated:

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 251 பேர் உயிரிழப்பு; 100 பேர் மாயம்!

மகாராஷ்டிரா மழை வெள்ளம்
மகாராஷ்டிரா மழை வெள்ளம் ( AP )

`மகாராஷ்டிராவில் 13 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 251 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த வாரம் பெய்த மழையால் 13 மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொங்கன் பகுதியிலுள்ள ராய்கட், சிந்துதுர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில், குறிப்பாக நிலச்சரிவால் மோசமாக பாதிக்கப்பட்ட தாலியா கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி கைவிடப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மழை வெள்ளம்
மகாராஷ்டிரா மழை வெள்ளம்
AP

இது குறித்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் அளித்த பேட்டியில், ``மகாராஷ்டிராவில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேரைக் காணவில்லை. வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் விவசாய பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. அவற்றுக்கு இழப்பீடு கொடுப்பது குறித்து மாநில அமைச்சரவை முடிவு செய்யும். உயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர்கள் பேசும்விதம் மகாராஷ்டிரா கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இல்லை. முதல்வர்கூட மத்திய அரசு உதவி செய்துவருவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் பேசும்விதம்தான் சரியில்லை. மத்திய அமைச்சர் நாராயண் ரானே வெள்ளப் பகுதியைப் பார்வையிட்ட பிறகு, தங்களுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது போன்ற நேரத்தில் அரசியல் பேசுவது சரியல்ல. பேரிடர் மேலாண்மைப் படையின் எட்டு குழுக்கள் கோலாப்பூரில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. 13 மாவட்டங்களில் 34 தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்புப்பணியில் 142 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்றார்.

மகாராஷ்டிரா மழை வெள்ளம்
மகாராஷ்டிரா மழை வெள்ளம்
AP

மேலும் மழை வெள்ளத்தால் கடந்த சில நாள்களாக மூடப்பட்டிருந்த புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் வடிந்திருப்பதால் முழுமையாகப் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான லாரிகள் படிப்படியாக நகரத் தொடங்கியுள்ளன. நிலச்சரிவால் மோசமாக பாதிக்கப்பட்ட கொங்கன் பகுதியில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு