Published:Updated:

5 வயது மகளை கவ்விய சிறுத்தை; போராடி மகளை மீட்ட வீரத்தாய்!

மகளுடன் அர்ச்சனா
மகளுடன் அர்ச்சனா

சிறுமி பிரஜக்தா, `அம்மா அம்மா' என்று சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறாள். என்ன ஆனதோ என்று அர்ச்சனா ஓடி வந்த போது, சிறுத்தை ஒன்று பிரஜக்தாவின் கழுத்துப் பகுதியைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு செல்ல முயன்றது.

மகாராஷ்டிர மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம், வனப்பகுதி நிறைந்தது. வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். வனப்பகுதியை ஒட்டியும் குடியிருப்புகள் இருக்கின்றன. அடிக்கடி சிறுத்தைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுவதுண்டு.

இம்மாவட்டத்தின் ஜுனோனா என்ற கிராமத்தில் வசிக்கும் அர்ச்சனா என்ற பெண்ணிற்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அர்ச்சனா இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டிற்குச் சென்றார். அவருடன் அவரின் 5 வயது மகள் பிரஜக்தாவும் சென்றிருக்கிறார். `வீட்டில் இரு' என்று அவர் அம்மா சொன்னதைக் கேட்காமல் கூடவே சென்றிருக்கிறார்.

வனப்பகுதிக்குள் சென்றதும் அர்ச்சனா அடர்ந்த மரங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்றார். அந்நேரம் சிறுமி பிரஜக்தா, `அம்மா அம்மா' என்று சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறாள். என்ன ஆனதோ என்று அர்ச்சனா ஓடி வந்த போது, சிறுத்தை ஒன்று பிரஜக்தாவின் கழுத்துப் பகுதியைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு செல்ல முயன்றது. நொடியும் தாமதிக்காத அர்ச்சனா, அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து சிறுத்தையின் வால் பகுதியில் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Child - Representational Image
Child - Representational Image
Image by PublicDomainPictures from Pixabay
கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட விபரீதம்; யானை தாக்கி உயிரிழந்த பழங்குடி இளைஞர்!

அப்படியும் சிறுத்தை தன் பிடியிலிருந்து சிறுமியை முழுமையாக விடவில்லை. இதனால் வேறு ஒரு பெரிய கம்பை எடுத்து சிறுத்தையை அர்ச்சனா தாக்கியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த சிறுத்தை, சிறுமியை விட்டுவிட்டு அர்ச்சனா மீது பாய ஆரம்பித்திருக்கிறது. அர்ச்சனா தன்னிடம் இருந்த கம்பைக் கொண்டு சிறுத்தையுடன் தொடர்ந்து போராடியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுத்தை இரண்டு பேரையும் விட்டுவிட்டு, காட்டுக்குள் ஓடிவிட்டது. அது சிறுத்தையா அல்லது புலியா என்று அர்ச்சனாவிற்கு தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது சிறுத்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அர்ச்சனாவிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரிகள் பிரஜக்தாவை மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுத்தையுடன் போராடி மகளை மீட்ட பெண்ணை வனத்துறை அதிகாரிகள் பாராட்டினர். சிறுமிக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் அபய் இது குறித்துக் கூறுகையில், ``எனது 21 ஆண்டுக்கால மருத்துவ சேவையில் சிறுத்தையின் பிடியில் சிக்கிய யாரும் உயிர் தப்பியது கிடையாது. அதிர்ஷ்டவசமாக பிரஜக்தா உயிர் தப்பி இருக்கிறாள். சிறுத்தை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி சிறுமியைப் பிடிக்காமல், தனது குட்டியை பிடிப்பது போன்று பிடித்துள்ளது. அதனால் தான் காயத்தின் தன்மை பெரிதாக இல்லை" என்று தெரிவித்தார்.

Forest (Representational Image)
Forest (Representational Image)

சிறுமியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கண்ணை மூடவே முடியாமல் இருக்கிறது. இதற்காக டாக்டர்கள் சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். சிறுமிக்குத் தாடையில் பெரிய அளவில் காயம் பட்டு அதன் வடிவமே மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

``சம்பவம் நடந்து நாள்கள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் எனது கண் முன்னே வந்து செல்கிறது. கண்ணை முடினாலே என் மகளை சிறுத்தை தூக்கிச்செல்லும் காட்சிதான் வருகிறது. சிறுத்தை என் மகளைப் பிடித்திருப்பதை பார்த்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சிறுத்தையைத் தாக்கினால் அது நிச்சயம் என்னை தாக்கும் என்ற பயம் இருந்தது. ஆனால் என் மகளைக் காப்பாற்ற என் உயிரை பணயம் வைப்பதில் எனக்குத் தயக்கமில்லை" என்கிறார் அர்ச்சனா.

அடுத்த கட்டுரைக்கு