Published:Updated:

கன்னித்தன்மை பரிசோதனையால் ஒதுக்கி வைத்த சமூகம்... சகோதரிகள் எடுத்த துணிச்சல் முடிவு இதுதான்!

Woman
Woman ( Image by StockSnap from Pixabay )

இந்தச் சம்பவங்கள் குறித்துப் பேசிய மேகா, 'எங்கள் பெயரை, புகைப்படத்தை வெளியிட நாங்கள் தயங்கவில்லை. எதற்காகவும் வெட்கப்படவில்லை. எங்களுக்குத் தேவை நீதி மட்டுமே. குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்' என்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு மணமகள்கள், கன்னித்தன்மை பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறி தங்களின் கணவர்களின் குடும்பத்தினரால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

மேகா குமானே (வயது 22), சஞ்சனா குமானே (வயது 19) இருவரும் சகோதரிகள். கடந்த 2020 நவம்பர் 27-ம் தேதி மேகா சந்திப் கஞ்சார்பாட் (32) என்பவரையும், சஞ்சனா அவரின் சகோதரரான சுர்மிட் (27) என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர். அன்றிரவு அவர்களின் சமூக சடங்கான கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றது. அதாவது, முதலிரவில் படுக்கையில் வெள்ளை துணியை விரித்து அதில் ரத்தக் கறை படிந்திருக்கிறதா என்று பார்த்து, கன்னிதன்மையை உறுதிசெய்வார்கள்.

இந்த கன்னித்தன்மை தேர்வில் மேகா `தோல்வியடைந்தார்' என அவரின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் கூறி, மேகாவை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர். கூடவே, இந்தத் தேர்வில் 'பாஸ்(!)' ஆன அவரின் சகோதரி சஞ்சனாவையும் வெளியேற்றியுள்ளனர். மேலும், இந்தச் சகோதரிகள் தங்கள் சமுதாயத்துக்கு ஏற்ற பெண்கள் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.

woman (Representational image)
woman (Representational image)
Pexels

இந்தச் சகோதரிகளின் தந்தை, திருமணத்துக்கு சில வருடங்கள் முன்னரே இறந்துவிட்டார். திருமணத்துக்கு சில மாதங்கள் கழித்து சகோதரிகளின் தாய் ரஞ்சிதா, மணமகன்களின் தாயிடம் சென்று முறையிட்டும், அழுதும் கெஞ்சியும் தன் மகள்களை வாழவைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த மணமகனின் தாய், பிப்ரவரி 2-ம் தேதி தங்கள் ஊரில் உள்ள பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் கலந்துகொள்ளக்கூட மணமகன்கள் வரவில்லை. பஞ்சாயத்து `பெரியவர்கள்', ஒரு குச்சியை இரண்டாக உடைத்து, திருமணம் பந்தம் முறிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவங்களால் வெகுண்டெழுந்த இளம் பெண்கள் மேகா மற்றும் சஞ்சனா, `அழுதது போதும், இவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என முடிவு செய்தனர்.

பின் 2021 ஏப்ரல் 8-ம் தேதி கோலக்பூரில் உள்ள ராஜாராம்பூரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் சகோதரிகள். அன்று இரவே ராஜேந்திர நகரில் உள்ள மேகா மற்றும் சஞ்சனா வீட்டின் மீது கற்கள் ஏறியப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த அவர்கள் அடுத்த நாள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மணமகன் சந்திப் கஞ்சார்பாட் கைது செய்யப்பட்டார். மேலும் ஏழு பேர் தலைமறைவாக உள்ளனர்.

Court (Representational Image)
Court (Representational Image)

இந்தச் சம்பவங்கள் குறித்துப் பேசிய மேகா, `எங்கள் பெயரை, புகைப்படத்தை வெளியிட நாங்கள் தயங்கவில்லை, எதற்காகவும் வெட்கப்படவில்லை. எங்களுக்குத் தேவை நீதி மட்டுமே. குற்றம் செய்தவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்' என்றனர்.

மகாராஷ்டிராவில் சமூக ஆர்வலர்கள் பலர், இதுபோன்ற கன்னித்தன்மையை பரிசோதிக்கும் தேர்வுகளை ஒழிக்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இதுபோன்ற நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் மகாராஷ்டிராவில் நடந்து வருகின்றன. மேகா, கஞ்சார்பாட் சமூகத்தில் இருந்து இந்தப் பிரச்னையை காவல்துறைக்கு எடுத்துச் சென்ற முதல் பெண். பல்வேறு தரப்பினர் இது குறித்து விவாதங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சார்பாட் பஞ்சாயத்தில் உள்ளவர்கள் இதுபற்றிப் பேசுவதற்குத் தயாராக இல்லை என்று கூறியுள்ளனர். பல்வேறு சமூக நல அமைப்புகள் அந்தப் பெண்களுக்கு உதவி செய்கின்றன. அவர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் தர ஏற்பாடு செய்கின்றனர். மகாராஷ்டிரா அமைப்புகள் இந்த விஷயம் பற்றி பரிசீலிக்குமாறு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளன. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த சகோதரிகளின் அம்மா, வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இப்போது தன் மகள்களுக்குக் கிடைத்துவரும் ஆதரவு மற்றும் உதவிகளைப் பார்த்து நெகிழ்ந்துபோயுள்ளார். மேலும், தங்கள் சமூகத்திலும் தங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)

பொதுவாக, பெண்களுக்கு இருக்கும் 'ஹைமன்' என்ற சவ்வு முதல் முறை உறவுகொள்ளும்போதுதான் கிழியும் என்று நம்பப்படுகிறது. அப்படி நிகழும்போது ஏற்படும் ரத்தக் கறையையே பலரும் 'கன்னித்தன்மை சோதனை'க்கான அளவுகோலாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹைமன் சவ்வு உடற்பயிற்சி செய்யும்போது, சைக்கிள் ஓட்டும்போது, விளையாடும்போது, விபத்து என்று பல சூழல்களிலும் கிழிவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், அதைக் கன்னித்தன்மைக்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ளதில் அர்த்தமில்லை என்பதை மகப்பேறு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், `இது அறிவியல்பூர்வமானதும் இல்லை, நாகரிகமானதும் இல்லை. மேலும், பெண்களுக்கு கன்னித்தன்மை என்ற அளவுகோலே தவறானது' என்று பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு