Published:Updated:

`பாகிஸ்தான் காதலியைத் தேடி 1,200 கி.மீ பயணம்!’ - இந்திய எல்லையில் சிக்கிய 20 வயது இளைஞர்

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள் ( (மாதிரிப்படம்) AP )

``மகாராஷ்டிரா பதிவு எண்ணுள்ள இருசக்கர வாகனம் ஒன்றை வியாழக்கிழமை மாலை ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள தோலவிரா எனும் பகுதியில் கண்டறிந்தோம். இதனால், பாகிஸ்தான் எல்லையினுள் யாரேனும் நுழைய முயற்சி செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்தது.”

இந்தியாவில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் பகுதிகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகள் முக்கியமானது. சமீபத்தில் நடைபெற்ற சீனாவுடனான மோதல், பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு எல்லைப் பகுதிகள் தொடர்ந்து அதிக பதற்றத்துடன் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் 20 வயது இளைஞர் ஒருவர் காதலியைத் தேடி சென்று எல்லைப் பகுதியில் பிடிபட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பி.எஸ்.எஃப்
பி.எஸ்.எஃப்

மகாராஷ்டிராவின் உஸ்மானாபாத் பகுதியைச் சேர்ந்த சித்தி முகமது ஜிஷன் என்ற 20 வயது இளைஞர்தான் பி.எஸ்.எஃப் வீரர்களிடம் பிடிபட்டவர். இவர், பொறியியல் படித்து வருகிறார். பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள ஷா ஃபைஸல் எனும் பகுதியில் வசிக்கும் தனது காதலியை சந்திப்பதற்காக இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடக்க முயன்றபோது வீரர்களிடம் அவர் பிடிபட்டுள்ளார். அந்த இளைஞர் கிட்டத்தட்ட 1,200 கி.மீ பயணம் செய்து அப்பகுதிக்குச் சென்றுள்ளார். ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணுடன் சித்திக் அறிமுகமாகியுள்ளார். காதலியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் செல்ல புறப்பட்டுச் சென்றுள்ளார்.

`அவரின் உடலைத் தேடுவது ஒரு கொடுங்கனவுபோல இருந்தது!' - பாகிஸ்தான் விபத்தில் தாயை இழந்த மகனின் வேதனை

தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் இருந்து இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இளைஞரை வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். முன்னதாக, இளைஞரின் பெற்றோர்கள் அம்மாநில காவல்துறையினரிடம் இளைஞர் காணாமல் போனது தொடர்பாகப் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பான தொடர் விசாரணைகளை மேற்கொள்ள பி.எஸ்.எஃப் வீரர்கள் இளைஞரை குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கட்ச் அதிகாரிகள் பேசும்போது, ``மகாராஷ்டிரா பதிவு எண்ணுள்ள இருசக்கர வாகனம் ஒன்றை வியாழக்கிழமை மாலை ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள தோலவிரா எனும் பகுதியில் கண்டறிந்தோம். இதனால், பாகிஸ்தான் எல்லையினுள் யாரேனும் நுழைய முயற்சி செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இருசக்கர வாகனம் கட்ச் பகுதியில் பழுதடைந்ததால், அவர் அப்பகுதியில் இருந்து நடந்து செல்ல தொடங்கியுள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞரைப் பிடித்து மேற்படி விசாரணைகளுக்காக காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா காவல்துறை
மகாராஷ்டிரா காவல்துறை

மகாராஷ்டிரா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்திலக் ரோஷன் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில், ``இளைஞர் காணாமல் போன அன்று அவரது குடும்ப உறுப்பினர்கள் உஸ்மானாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர். சித்திக்கின் சமூக வலைதள கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் வழியாக அவர் பாகிஸ்தானில் உள்ள பெண் ஒருவரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியதைக் கண்டுபிடித்தோம். இதனையடுத்து, அவரது மொபைல் லொகேஷனை பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அம்மாநில அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்” என்று கூறியுள்ளார்.

சித்திக் தொடர்பான தகவல்கள் குஜராத் காவல்துறையினரிடமும் பி.எஸ்.எஃப் வீரர்களிடமும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. உஸ்மானாபாத் அதிகாரிகள் அவரை மீட்டு வருவதற்காக குஜராத் மாநிலத்துக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் காவலர்களின் விசாரணையிலும் தான் காதலியை சந்திக்க செல்வதாகவே சித்திக் தெரிவித்துள்ளார். அவர் நடந்து செல்லும்போது உடலில் நீர் வற்றியதாகவும் இதனால் சோர்வடைந்து மயக்கமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`எல்லையில் பிடிபட்ட புறா.. கால்களில் எண்கள்.. பாகிஸ்தான் உளவு வேலையா?’- அதிகாரிகள் சொல்லும் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு