Published:Updated:

மகாராஷ்டிரா: மது விலக்கை நீக்க உதவிய அமைச்சர்; பூஜை செய்து வழிபட்ட பார் உரிமையாளர்கள்!

அமைச்சருக்கு ஆர்த்தி
அமைச்சருக்கு ஆர்த்தி

6 ஆண்டுகளுக்கு பிறகு மது விலக்கு நீக்கப்பட்டதால் பீர் பார் உரிமையாளர்கள் மாநில அமைச்சருக்கு பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சந்திராப்பூர், வார்தா, கட்சிரோலி ஆகிய மாவட்டங்களில் மது விலக்கு அமலில் இருக்கிறது. இதில் சந்திராப்பூரில் கடந்த பா.ஜ.க ஆட்சியில் மது விலக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பீர் பார் உரிமையாளர்கள், ஒயின் ஷாப் லைசென்ஸ்கள் அரசால் ரத்து செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. 2018ம் ஆண்டு இந்த மது விலக்கு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசு ராமநாத் ஷா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்திருந்தது.

அக்கமிட்டி தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. அதில், மது விலக்கு அமல்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்றும், கள்ளச்சாராம், போலி மதுபானம் போன்றவை சட்டவிரோதமாக தயாரித்து விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் மது விலக்கு அமலில் இல்லாமல் இருந்த காலமான 2010-14ம் ஆண்டில் 16 ஆயிரம் குற்றங்கள் மட்டுமே இம்மாவட்டத்தில் நடந்துள்ளது.

அமைச்சருக்கு ஆர்த்தி
அமைச்சருக்கு ஆர்த்தி

ஆனால் மது விலக்கு கொண்டு வந்த பிறகு 2015-19ம் ஆண்டில் 40 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதோடு மது விலக்கால் 5 ஆண்டில் மாநில அரசுக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்ய சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் விஜய் வடேத்திவார் மது விலக்கை நீக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் மது விலக்கு நீக்கப்படுவதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்டவிரோத சாராய ஆலைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுத்திருப்பதாக முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மது விலக்கு தற்போது இரண்டு மாவட்டத்தில் மட்டும் அமலில் இருக்கிறது. பீர் பார்கள் மற்றும் ஒயின் ஷாப்களை திறக்க வேண்டும் என்று 2.43 லட்சம் பேர் அரசுக்கு மனு கொடுத்துள்ளனர். சாராய கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று கோரி 26 ஆயிரம் அரசிடம் மனு கொடுத்திருந்தனர்.

மகாராஷ்டிரா: பாஜக மாஜி அமைச்சர் ஏக்நாத் கட்சேயிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
அமைச்சருக்கு ஆர்த்தி
அமைச்சருக்கு ஆர்த்தி

மாநில அரசு மதுவிலக்கை ரத்து செய்து இருப்பதால் பீர் பார் உரிமையாளர்கள், ஒயின் ஷாப் உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களில் சில பார் உரிமையாளர் மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் மது விலக்குக்கு காரணமான மாவட்ட பொறுப்பு அமைச்சர் விஜய் வடேத்திவாரின் புகைப்படத்திற்கு ஆர்த்தி எடுத்து வழிபட்டனர். இது குறித்து சந்திராப்பூர் பீர் பார் ஒன்றில் அமைச்சர் படத்திற்கு ஆர்த்தி எடுத்துக்கொண்டிருந்த பார் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ``பீர் பார்களை மீண்டும் திறக்க உதவிய அமைச்சர் விஜய்தான் எங்களுக்கு தெய்வம். வருமானத்தை ஈட்ட உதவுபவர்கள் தான் எங்களுக்கு தெய்வம்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு