Published:Updated:

முந்தைய காங்கிரஸ் ஆட்சி, இன்றைய பாஜக ஆட்சி... இந்தியா காந்தி தேசமாக நீடித்தது எப்போது?

மகாத்மா காந்தி
News
மகாத்மா காந்தி

காந்தி இறந்தபோது, இந்தியாவுக்கு `காந்தி தேசம்’ எனப் பெயர்சூட்ட வேண்டுமென்றார் பெரியார். அவரின் கோரிக்கை அப்போது நிறைவேற்றப்படவில்லை. அதேசமயம் காந்தியின் கொள்கையாவது எந்த அளவுக்கு காங்கிரஸ், பாஜக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

Published:Updated:

முந்தைய காங்கிரஸ் ஆட்சி, இன்றைய பாஜக ஆட்சி... இந்தியா காந்தி தேசமாக நீடித்தது எப்போது?

காந்தி இறந்தபோது, இந்தியாவுக்கு `காந்தி தேசம்’ எனப் பெயர்சூட்ட வேண்டுமென்றார் பெரியார். அவரின் கோரிக்கை அப்போது நிறைவேற்றப்படவில்லை. அதேசமயம் காந்தியின் கொள்கையாவது எந்த அளவுக்கு காங்கிரஸ், பாஜக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

மகாத்மா காந்தி
News
மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, இந்தியா காந்தி தேசமாக எந்த ஆட்சியில் நீடித்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் `காந்தி தேசம்’ என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். அதை அணுகுவது மிக எளிதானதும்கூட. காந்தி கண்ட லட்சிய தேசத்துக்கு உண்மை (Satya), அகிம்சை (Ahimsa), அமைதியான எதிர்ப்பு (Satyagraha), அனைவரின் நலன் (Sarvodaya) ஆகிய நான்கு தூண்களே பிரதான பங்கு வகிக்கின்றன. இவற்றில் சர்வோதயா எனும் ஒன்றில் மட்டும், சகோதரத்துவம், பெண் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், கிராம சுயராஜ்யம் உள்ளிட்ட அனைத்துக் காரணிகளும் அடங்கிவிடுகின்றன.

காந்தி தேசம்
காந்தி தேசம்

காந்தி இறந்தபோது, இந்தியாவுக்கு `காந்தி தேசம்’ எனப் பெயர்சூட்ட வேண்டும் என்றார் பெரியார். அவரின் கோரிக்கை அப்போது நிறைவேற்றப்படவில்லை. அதேசமயம் காந்தியின் கொள்கையாவது எந்த அளவுக்கு காங்கிரஸ், பாஜக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

காங்கிரஸ் ஆட்சியில் காந்தி தேசம்:

இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கமாகவே விளங்கிய காங்கிரஸ் கட்சியின் ஆணிவேராக இருந்தார் காந்தி. காந்தியின்றி கட்சியில்லை என்ற சூழலில் காங்கிரஸின் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது முதல் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் என அத்தனைக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், காந்தியின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளை அவர் வழிவந்த நேரு திறம்பட செயல்படுத்திக்காட்டினார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், ஐந்தாண்டு திட்டம் போன்ற நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் காந்தியின் கொள்கைகளையே பிரதிபலித்தன.

நேரு, காந்தி
நேரு, காந்தி

நேருவுக்கு பின்னர் காங்கிரஸ் சார்பில் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் குறிப்பிட்ட ஒரு செயல்பாடு உலக அளவில் இந்தியா மீதான பார்வையை அடியோடு மாற்றியது. அது, 1974-ல் இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை. இந்தியாவை காந்தியின் அகிம்சை தேசமாக அதுவரையில் கருதிவந்த உலகம், அணுகுண்டு தேசமாக முதலில் கருதியது அப்போதுதான். அந்த சோதனைக்குப் பிறகு கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடனான உறவை முறித்துக்கொண்டன.

பொக்ரான் அணுகுண்டு சோதனை
பொக்ரான் அணுகுண்டு சோதனை

இந்திரா காந்திக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி போஃபர்ஸ் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். அது காந்தியின் வாய்மை, தூய்மையை கேள்விக்குள்ளாக்கியது. அதேசமயம் காந்தியப் பார்வையில் எத்தனை விமர்சனங்களை ராஜீவ் காந்திமீது வைத்தாலும், காந்தியின் பிரதான கொள்கையான 'பஞ்சாயத்துராஜ்' சட்டத்துக்கு அடித்தளமிட்டது ராஜீவ் காந்தி என்பது மறுக்க முடியாத உண்மை.

தாழ்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் என அனைத்துச் சமூகத்தினரும் பஞ்சாயத்து, நகராட்சித் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் ஆகக்கூடிய, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய சட்டமாக அது விளங்கியது. காந்தியின் கனவுத்திட்டமான பஞ்சாயத்துராஜ் சட்டத்தை 1989-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் ராஜீவ் காந்தி. அவர் மறைவுக்குப் பின்னர் 1993-ம் ஆண்டு நாடெங்கும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

பின்னர், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கினார். 2004-ல் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டு மன்மோகன்சிங் பிரதமரானார். அன்றைய நிலையில் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மக்களுக்கு நேரடிப் பயன்தரக்கூடிய திட்டமாகவும் கொண்டுவரப்பட்டது 100 நாள் வேலைத்திட்டம். காந்தியின் கிராமப் பொருளாதாரத்தையும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் திட்டமென்பதால் `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்' (MGNREGA) எனப் பெயர் சூட்டப்பட்டு நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நூறு நாள் வேலை திட்டம்
நூறு நாள் வேலை திட்டம்

இருப்பினும், இதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் இறுதி தசாப்தத்தில் காந்தியக் கொள்கைக்கு மாறான உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அந்நிய முதலீடுகளும், கார்ப்பரேட் நலன்சார் திட்டங்களும் அதிகரித்தன. முக்கியமாக 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல், டெல்லி காமன்வெல்த் ஊழல் எனப் பல்வேறு ஊழல் புகார்களிலும் ஊறித்திளைத்தது.

சோனியா, மன்மோகன் சிங்
சோனியா, மன்மோகன் சிங்

இவையெல்லாம் காந்திய கண்ணோட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற சில முக்கியமான திட்டங்களும், சம்பவங்களுமாக கவனம்பெறுகின்றன.

பாஜக ஆட்சியில் காந்தி தேசம்:

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பாஜக தோற்றம் பெறவில்லை என்றாலும்கூட, அதன் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. காந்தி ஒருபுறம் மத நல்லிணக்கம் எனும் பெயரில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திக்கொண்டிருந்தபோது, பூரண இந்துத்துவா தத்துவத்தை போதித்துக்கொண்டிருந்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

அகண்ட பாரதம், இந்து தேசியம், இந்தியாவை இந்துநாடாக அறிவிப்பது போன்ற ஒற்றை மதச்சார்பான கொள்கைகளை முன்னிறுத்தி, அடிப்படையிலேயே காந்தியத்துடன் முரண்பட்டது. இந்தியா-பாக். தேசப் பிரிவினை, சுதந்திரத்துக்கு பின்பு இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தது போன்ற பல்வேறு காரணங்களுக்காக காந்தி, தீவிர இந்துத்துவவாதிகளால் படுகொலை செய்யப்படுகிறார். இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இருந்தாகக் குற்றம்சாட்டப்பட்டு, அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. பின்னர் தடைநீக்கமும் செய்யப்பட்டது.

மகாத்மா காந்தி இறப்பு
மகாத்மா காந்தி இறப்பு

அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவாக 1951-ல் பாரதிய ஜனசங்கம் தோற்றம் பெற்று, 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக உருமாற்றம் பெற்றது. பாஜக ஆட்சியமைக்காதபோதும் 1992 அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்மந்தப்பட்டு, இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட இடமளித்தது. காந்தி ஆழமாக வலியுறுத்திய இந்து-முஸ்லிம் ஒற்றுமை இந்த விவகாரத்திலேயே கேள்விக்குறியானது.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம்
பாபர் மசூதி இடிப்பு சம்பவம்

1998-ல் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சியில் இரண்டாவது முறையாக பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் இந்தியா மீண்டும் காந்தியின் அகிம்சைக் கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தின. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாமீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அது வழிவகுத்தது.

பொக்ரான் கட்டுரை
பொக்ரான் கட்டுரை
#VikatanOriginals

அகிம்சை தவிர்த்து காந்தியின் சுதேசி சிந்தனை, கிராமப் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தது, அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கியது. அதே காலகட்டத்தில்தான் குஜராத்தில் பாஜக முதல்வராக மோடி ஆட்சியிலிருந்தபோது, கோத்ரா இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்து, மதநல்லிணக்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.

2014, 2019 ஆண்டுகளில் தொடர்ச்சியாக மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து காந்திய சிந்தனை மீதான தாக்குதல் நாடெங்கும் பரவலானது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. காந்தி கனவான ஜனநாயக ராமராஜ்யத்துக்கு மாறாக, இந்துத்துவ ராமராஜ்யத்தை முன்னெடுத்து பசுவதை தடுப்புச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டங்களை கொண்டுவந்து புதுகற்பிதம் கொடுத்தது.

பாஜக-வின் ஒருசில எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் காந்தியைச் சுட்டது சரிதான் என்றும், கோட்சேதான் உண்மையான தேசபக்தர் என்றும் பேசிவருவது பொதுப்படையாகவே பாஜக-விலுள்ள சிலர் காந்தி எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கின்றனர் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திவிடுவதாக அமைகிறது.

பிரக்யா சிங்
பிரக்யா சிங்

``காந்தி தாய்மொழிக் கொள்கையை விரும்பினார், பாஜக ஆட்சியில் இந்தி-சம்ஸ்கிருத திணிப்பு நிகழ்கிறது. காந்தி மதச்சார்பற்ற இந்தியாவைக் காண, இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தைப் பேண கடுமையாகப் போராடினார். நாடு மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகி இந்துதேசியவாதத்தை நோக்கி நகர்கிறது" என்பதாக பாஜக ஆட்சியில் காந்தியக் கொள்கையின் நிலை இருக்கிறது எனப் பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஹத்ராஸ்..!
ஹத்ராஸ்..!
HASSIFKHAN K P M

காந்தியக் கொள்கைக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என அதிக அளவு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோதிலும், பிரதமர் மோடி காந்தியக் கொள்கைகளை செல்லுமிடங்களிலெல்லாம் பேசி புகழ்ந்துரைப்பதும் நடப்பதுண்டு. குறிப்பாக, காந்தி கண்ட கனவு தேசத்தை நனவாக்கும்படி, `தூய்மை இந்தியா’ (Swachh Bharat) திட்டத்தைக் கொண்டுவந்து நாடு முழுவதும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

தூய்மை இந்தியா - மோடி
தூய்மை இந்தியா - மோடி

காங்கிரஸ் கட்சி ஆட்சிலும் சரி, பா.ஜ.க ஆட்சியிலும் சரி எந்தக் கட்சி ஆட்சிலும் `காந்தி தேசம்’ முழுமையாக நீடிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை! ஆனால் இன்றைய சூழலில், காந்தி தேசத்துக்கானத் தேவை மேலும் அதிகரித்துவருகிறது என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை!