Published:Updated:

`வென்டிலேட்டர்; தற்காலிக மருத்துவமனை; 100% சம்பளம்’ - கொரோனா தடுப்பில் அசத்தும் ஆனந்த் மகிந்த்ரா

ஆனந்த் மகிந்த்ரா
ஆனந்த் மகிந்த்ரா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தன் நிறுவனம் சார்பில் வென்டிலேட்டர் தயாரிக்கப்படும் என மகிந்த்ரா நிறுவன சி.இ.ஓ ஆனந்த் மகிந்த்ரா அறிவித்துள்ளார்.

மகிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டரில் எப்போதும் பிஸியாக இருப்பவர். பொதுமக்களின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டுவதில் தொடங்கி சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது வரை என தன் தனிப்பட்ட வேலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் மற்றும் நாட்டுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குவார் மகிந்த்ரா நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனந்த் மகிந்த்ரா. இதுமட்டுமில்லாது நாட்டில் ஏற்படும் பேரிடர் காலங்களில் தன் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு செயல்களைச் செய்து வரும் அவர் தற்போது கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் அரசுக்கு உதவ முன்வந்துள்ளார்

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நிலை மற்றும் தன் உதவி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்த்ரா, ‘தொற்று நோயியல் நிபுணர்களின் பல்வேறு அறிக்கைகளின்படி, இந்தியா ஏற்கனவே வைரஸ் பரவலின் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. வரும் காலங்களில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இது நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்கு நகரங்கள் பூட்டப்பட்டால் வைரஸ் பரவுவதை இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்த உதவும். மேலும் இது மருத்துவத்துறை மீது இருக்கும் அதிக அழுத்தத்தையும் குறைக்கும். இதைவிட தற்போது நம் நாட்டில் சில தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது மற்றும் நம்மிடம் வென்டிலேட்டர் பற்றாக்குறையும் உள்ளது, இதையும் சரி செய்ய வேண்டும். கணிக்க முடியாத இந்த அச்சுறுத்தலில் அரசுக்கு உதவும் வகையில் மகிந்த்ராவின் உற்பத்தி குழு வெண்டிலேட்டர்களை உருவாக்கும் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த விடுமுறை நாள்களில் எங்கள் ரிசார்டுகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி வழங்கவும் தயாராக உள்ளோம்.

அதேபோல் தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதில் அரசு அல்லது ராணுவத்துக்கு உதவ எங்கள் திட்ட குழு தயார் நிலையில் உள்ளது. இந்த செயின் பிரேக் நிகழ்வில் மிக கடுமையாகப் பாதிக்கப்படும் சிறு வணிகங்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் மகிந்த்ரா அறக்கட்டளை ஒரு நிதியை உருவாக்கும். இந்த நிதியில் விருப்பப்படுபவர்கள் பங்கேற்கலாம் அவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அடுத்த சில மாதங்களுக்கு எனது சம்பளத்தில் 100 சதவிகிதத்தை இந்த நிதிக்காக நான் வழங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவு இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு