Published:Updated:

`என் மகனின் மரணத்துக்கு அழமாட்டேன்;தியாகத்துக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது!'-ராணுவவீரரின் தந்தை

வீரர் அனூஜின் மனைவி
வீரர் அனூஜின் மனைவி ( twitter/ @anita_chauhan80 )

”அனூஜுக்கு திருமணம் முடிந்து சில மாதங்கள்தான் ஆகிறது. அடுத்த சில மாதங்களில் அவரை பார்க்கப்போகிறோம் என்று அனூஜுக்காகக் காத்திருந்த அவரின் மனைவி அக்ரித்தியைதான் எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் நிலை குலைந்து நிற்கிறோம்."

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்து நிற்கின்றன. கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் தீவிரவாதத் தாக்குதல், தீவிரவாதிகள் ஊடுருவல் என இந்திய எல்லைகளில் பல தாக்குதல்கள் அன்றாடம் அரங்கேறிவருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு, காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது, திடீரென்று தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மூத்த ராணுவ வீரர்கள் உட்பட ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இறந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவவீரர் அனூஜ் சூட்டின் உடலுக்கருகில் அவரின் மனைவி அமர்ந்து தன் கணவரின் முகத்தைப் பார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவிவருகின்றன.

எல்லையையொட்டி படைகளைக் குவிக்கும் பாகிஸ்தான்! - தீவிரக் கண்காணிப்பில் இந்திய ராணுவம்

தன் மகனின் மரணம் குறித்து அனூஜின் தந்தை பேசுகையில், ``என் மகன், மகள் இருவரையும் என் நாட்டுக்காகப் பணிபுரிய அனுப்பினேன். என் குழந்தைகள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள். தாய்நாட்டைக் காக்கிறார்கள் என்பது பல நேரங்களில் நான் பெருமைப்பட்ட விஷயம். அனூஜ் தன்னுடைய 12 வயதிலிருந்து ராணுவ வீரராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவன். அவனுடைய பேச்சிலேயே அவன் தன் நாட்டை எவ்வளவு நேசிக்கிறான் என்பது புரியும்.

வீரர் அனூஜ்ஜின் மனைவி
வீரர் அனூஜ்ஜின் மனைவி
twitter/ @anita_chauhan80

2008-ம் ஆண்டு முதல் முதலாக ராணுவ உடை அணிந்த அனூஜ்ஜை பார்க்கும்போது எவ்வளவு பெருமையாக இருந்ததோ, இப்போது அவரது சடலத்தை அதே பெருமையுடன்தான் பார்க்கிறேன். அவர் தன் தாய்நாட்டை காக்க உயிர் கொடுத்திருக்கிறார். அவர் கனவுக்காக உயிர் நீத்திருக்கிறார். இந்த வீரமரணத்துக்கு நான் அழமாட்டேன். அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஆனால், அனூஜுக்கு திருமணம் முடிந்து சில மாதங்கள்தான் ஆகிறது. அடுத்த சில மாதங்களில் அவரைப் பார்க்கப்போகிறோம் என்று அனூஜுக்காகக் காத்திருந்த அவரின் மனைவி அக்ரித்தியைதான் எப்படி தேற்றுவது என்று தெரியாமல் நிலை குலைந்து நிற்கிறோம்" என்று கூறியுள்ளார். வீரர் அனூஜின் உடல் உரிய ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு