Published:Updated:

`ஸ்டாப்பில் நிற்பதில்லை; மாணவர்கள் ஏறினால் வசைபாடுவார்!'- கண்டக்டருக்கு கலெக்டரின் விசித்திர தண்டனை

மலப்புரம் கலெக்டர் மாலிக்
News
மலப்புரம் கலெக்டர் மாலிக்

விசாரணை நடத்திய மலப்புரம் கலெக்டர் மாலிக், கண்டக்டர் மீது தவறு இருப்பதை அறிந்து நடவடிக்கை எடுத்தார். அவர் எடுத்த நடவடிக்கை சற்று வித்தியாசமானது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வாளிகடவு - பரப்பநங்கடி ரூட்டில் ஓடுகிறது தனியார் பேருந்து ஒன்று. இந்தப் பேருந்து அந்தப் பகுதி பள்ளிக் குழந்தைகளை வண்டியில் ஏற்றுவது இல்லை என்றும், அப்படி ஏற்றினாலும் அவர்கள் பள்ளியில் நிற்காமல் இரண்டு நிறுத்தங்கள் தள்ளித்தான் நிற்கிறது என்றும் தொடர்ந்து புகார் கொடுத்து வந்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். இதற்கிடையேதான் சமீபத்தில் வெங்காரா பகுதியில் அதே பஸ்ஸில் சில மாணவர்கள் ஏற, அவர்களை கண்டக்டர் ஷஹீர் தரக்குறைவாகப் பேசி அவர்களைப் பள்ளியில் இறக்கிவிடாமல் இருந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்து
பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்து

பயணிகள் சிலர் வற்புறுத்தியும் கேட்காமல் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிலரால் ஃபேஸ்புக்கில் பதிவிட வைரலாகியது. பின்னர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் இந்த ஃபேஸ்புக் போஸ்ட்டைப் பார்த்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டரை அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மலப்புரம் கலெக்டர் மாலிக், கண்டக்டர் மீது தவறு இருப்பதை அறிந்து நடவடிக்கை எடுத்தார். அவர் எடுத்த நடவடிக்கை சற்று வித்தியாசமானது. மாணவர்களை திட்டிய பஸ்ஸின் டிரைவர், கண்டக்டர் இருவரும் கஸ்டடியில் எடுக்கப்பட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பஸ்ஸும் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு நிற்காமல், கஸ்டடியில் எடுக்கப்பட்ட கண்டக்டரை ஆதரவற்ற குழந்தைகள் முகாமுக்கு `பராமரிப்பாளர்' (caretaker) ஆக அனுப்பினார் கலெக்டர் மாலிக். 10 நாள்கள் அங்கு பராமரிப்பாளராக பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்ட அவர், அரசு குழந்தைகள் நல காப்பகம் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் அந்த கண்டக்டர் மீண்டும் நடத்துநராக தொடர அனுமதிக்கப்படுவார் என்றும் உத்தரவிட்டார். மேலும், ``அரசு காப்பகத்தில் குழந்தைகளுடன் பழகிய 10 நாள்களுக்குப் பிறகு, அவர் குழந்தைகளை நேசிக்கும் மற்றும் அவர்களின் உணர்வுகளைத் தழுவும் பஸ் ஊழியராக அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்" என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் கலெக்டர்.

மலப்புரம் கலெக்டர் மாலிக்
மலப்புரம் கலெக்டர் மாலிக்

கலெக்டரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கடுமையான தண்டனை கொடுக்காமல் அவரை உணர்வுபூர்வமாக திருத்தியுள்ளார் கலெக்டர் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ``தனியார் பஸ் ஊழியர்கள் பள்ளி மாணவர்கள் மீதான தங்கள் பார்வையை மாற்ற வேண்டும் என்றே இப்படி ஒரு செயலைச் செய்தேன். சம்பந்தப்பட்ட அந்த நடத்துநர் அரசு காப்பகத்தில் குழந்தைகளுடன் பழகிய பிறகு அவர்களை புரிந்துகொண்டு நேசிக்கும் நபராக மாறியிருப்பார் என நம்புகிறேன்" என தண்டனை குறித்து பேசியுள்ளார் கலெக்டர் மாலிக்.