Published:Updated:

`பிரசாரத்தில் அதிகக் கூட்டம்; தோல்வி மட்டுமே மிச்சம்!’ -பொதுவெளியில் சொந்த கட்சியினரை விளாசிய மம்தா

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மால்டா மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்று கூறி தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளைப் பொதுவெளியில் விளாசியுள்ளார் மம்தா.

மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் திட்டியுள்ளார். தன் கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் காரணமாகப் பாரம்பர்யமாக உள்ள மால்டா தொகுதியில் தொடர் தோல்வி ஏற்படுவதால் அவர் நிர்வாகிகளைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் 12 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இதில் ஒன்றில் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை. சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவும், காங்கிரஸும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. அதேபோல் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணியும் ஒரு இடத்தில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றன.

`ஓட்டு போட்டாச்சு, இனி அவர்கள் இந்திய சிட்டிசன்களே!' -வங்கதேசத்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா

``மால்டாவில் 12 தொகுதிகளில் உள்ளன. ஆனால், ஒன்றில் கூட ஏன் நம்மால் வெற்றி பெறமுடியவில்லை. மேலும் நம் கட்சியைச் சேர்ந்த அதிகமான நிர்வாகிகள் அங்குதான் உள்ளனர். இருந்தும் அவர்களால் ஒரு இடத்தைக் கூட வென்று கொடுக்க முடியவில்லை. மால்டாவில் நான் பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்தும்போதெல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். ஆனால், தேர்தல் முடிவு என்று வரும்போது தோல்வியே மிஞ்சுகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இதற்கான காரணம் எனக்குப் புரிகிறது. மால்டாவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் நீண்ட காலமாக அரசியலில் இருந்துள்ளேன். நிறைய தவறுகள் நம்மிடம் உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. இவை அனைத்தையும் சரிசெய்யாவிட்டால் நான் அங்கு ஆயிரம் கூட்டங்களை நடத்தினாலும் அவை அனைத்தும் பயனற்றதாகிவிடும்” எனக் கோபமாகப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி.

மால்டாவில் அதிகமாக இஸ்லாமிய மக்களின் ஓட்டுகளே உள்ளன. அவை பெரும்பாலும் காங்கிரஸுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்குமே விழும், சில ஓட்டுகள் கம்யூனிஸ்ட்டுகளுக்குச் செல்லும். இது தவிர அங்கு இருக்கும் இந்து ஓட்டுகள் பா.ஜ.கவுக்கு விழக்கூடியவை. இந்தச் சூழலில் எம்.எல்.ஏ சபித்ரி மித்ரா மற்றும் கவுர்சந்திரா மண்டால் ஆகிய இருவரும் தொடர்ந்து சண்டையிடுவதால்தான் வாக்குகள் பிரிவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மால்டாவில் பொறுப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சரமாரியாகத் தாக்கிப் பேசியுள்ளார் மம்தா.

அடுத்த கட்டுரைக்கு