Published:Updated:

``என் மகள் முன்பாக ஏன் என்னை அடித்தீர்கள்" - போலீஸுடன் வாக்குவாதம் செய்த நபர், வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ
News
வைரல் வீடியோ

அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத எஸ்.ஐ, ஹெல்மெட் எதற்காகப் போடவில்லை எனக் கடுமையாகக் கேட்டிருக்கிறார்.

தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் . இவர் நேற்றைய தினம் தன் 8 வயது மகளை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, சப் இன்ஸ்பெக்டர் முனிருல்லாஹ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாஸை எஸ்.ஐ தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார். அப்போது, ஸ்ரீநிவாஸ் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், எஸ்.ஐ முனிருல்லாஹ் அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதற்கு ஸ்ரீநிவாஸ், ``என் வீடு அருகில்தான். காய்கறிகளை வாங்கிக்கொண்டு என் மகளுடன் சென்றுகொண்டிருக்கிறேன்" என்று விளக்கமளித்திருக்கிறார்.

ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீநிவாஸ்

ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத எஸ்.ஐ., ஹெல்மெட் எதற்காகப் போடவில்லை எனக் கடுமையாகக் கேட்டிருக்கிறார். அதனால், ஸ்ரீநிவாஸின் 8 வயது மகள் பயந்துபோயிருக்கிறார். அதையடுத்து, ஸ்ரீநிவாஸும் பதிலுக்கு அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

அதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஐ முனிருல்லாஹ், ஸ்ரீநிவாஸை அவரின் மகளின் முன்பே ஓங்கிக் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதையடுத்து, அந்த இடத்தில் மக்கள் அதிக அளவில் கூடினர். தன்னைத் தாக்கியவரிடம் ஸ்ரீநிவாஸ், ``நான் ஹெல்மெட் அணியவில்லையென்றால், நீங்கள் அதற்கு எனக்கு அபராதம்தான் விதிக்க வேண்டும். என் மகள் முன்பாக என்னை எதற்காக அடித்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கு அந்த எஸ்.ஐ-யும் பதிலளித்து வாக்குவாதம் செய்தார். அதனால், அந்தப் பகுதியில் கூட்டம் கூடியது. ஸ்ரீநிவாஸைத் தாக்கிய எஸ்.ஐ-க்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, மக்கள் கலைக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களை அங்கிருந்த சிலர் தங்கள் மொபைலில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ``ஸ்ரீநிவாஸ் தான் ஹெல்மெட் அணியாமல் வந்தது தொடர்பாக விசாரித்த எஸ்.ஐ-யை ஆபாசமாகத் திட்டியிருக்கிறார். அதனால்தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது" என்று விளக்கமளித்திருக்கிறார்.

ஆனால், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஸ்ரீநிவாஸ் தாக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.