Election bannerElection banner
Published:Updated:

ஆந்திரா: கொரோனாவால் இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற மகன்!

ஆந்திரா
ஆந்திரா

தனது தாயின் உடலை, தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது இல்லத்துக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார்.

கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த தேசமும் திணறிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவக் கட்டமைப்பு குறைபாடு, மக்களின் அலட்சியம் எனப் பல்வேறு காரணிகளின் காரணமாக உயிர்ச்சேதங்கள் அதிகரித்தபடியிருக்கின்றன. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, இடுகாடுகளில் எரியூட்டுவதற்கு வரிசை எனத் தற்போதைய கொரோனா சூழல் மனதைப் பதைபதைக்கவைக்கிறது.

கொரோனா
கொரோனா

ஆந்திர மாநிலம், ஸ்ரீகுளம் மாவட்டம், சிகாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மஞ்சுளா அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வீட்டு சிகிச்சையில் மஞ்சுளா தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன் மஞ்சுளாவுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார். அதையடுத்து, அவர் மகன் அவரை காந்திநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மஞ்சுளாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர்.

தாயின் மறைவால் மனமுடைந்துபோன மஞ்சுளாவின் மகன் தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்தை அணுகி தன் தாயின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், கொரோனா நோயாளியின் உடல் என்பதால் அச்சமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மஞ்சுளாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். கொரோனா நோயாளி உடல் என்பதால் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் என யாரும் மஞ்சுளாவின் உடலை எடுத்துச் செல்ல முன்வராததால் அவர் மகன் மீண்டும் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சியிருக்கிறார். அவரின் கதறல்களுக்குச் செவி சாய்க்காத ஊழியர்கள் அவரை விரட்டாத குறையாக வெளியே அனுப்பியிருக்கின்றனர்.

உயிரிழந்த மஞ்சுளாவின் உடலை இருசக்கர  வாகனத்தில் ஏற்றிச் செல்லும் அவரது மகன்
உயிரிழந்த மஞ்சுளாவின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் அவரது மகன்

யாரும் உடலை எடுத்துச் செல்ல முன்வராததால் மஞ்சுளாவின் மகன், தன் தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் தன் உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது இல்லத்துக்குச் கொண்டு சென்றார். கொரோனா நோயாளியின் உடலை இருசக்கர வாகனத்தில் நடுவில் வைத்துக்கொண்டு இரு நபர்கள் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அதிர்வை ஏற்படுத்திவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு