Published:Updated:

வெளிநாடு ரிட்டர்ன்... அறிகுறி இருந்தும் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி!-கேரளாவில் அதிர்ச்சி #Corona

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

"மருத்துவத் துறையினர் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் நிலையில், எந்த கவனக்குறைவுகளும் ஏற்படக்கூடாது. அதனால்தான் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" - கேரள சுகாதாரத்துறை அமைச்சர்.

கேரள மாநிலத்தில், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தாலும், ஏழு நாள்கள் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். அதேசமயம், வெளிநாட்டிலிருந்து கொரோனா அறிகுறிகளுடன் வந்த ஒருவருக்கு சாம்பிள்களை எடுத்துக்கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30-ம் தேதி, குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள், சளி உள்ளிட்ட சாம்பிள்களை எடுத்துக்கொண்டு அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதுவும் அவரது உறவினர்கள் கொண்டுவந்த காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அவரின் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இதனால் அவரை மீண்டும் அழைத்து சிகிச்சைக்காக அட்மிட் செய்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சமரசமே செய்துகொள்ளாத கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், "ஏர்ப்போட்டிலிருந்து வந்தவரது பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே அவரை டிச்சார்ஜ் செய்தது குறித்து திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். கொரோனா அறிகுறியுடன் வந்தவரை வீட்டுக்கு அனுப்பியது யார் எனக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்யாமல், நேரடியாக வீட்டு குவாரன்டீனில் வைக்கலாம் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. ஆனால், கேரளத்தில் மாதிரிகள் பரிசோதனை செய்து பாசிட்டிவ் முடிவு வரும் வரை அவரை குவாரன்டீனில் வைக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியைப் பின்பற்றாமல் அவரை வீட்டுக்கு அனுப்பியது ஏன் என்று விசாரணை நடத்துவது அவசியம். கொரோனா சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு அவரை தனியார் வாகனத்தில் அனுப்பிவைத்ததாக செய்திகள் வருகின்றன.

கொரோனா
கொரோனா

மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, அவரை ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்ததாகவும். வீட்டில் இருந்து திரும்ப அழைத்து வந்ததும் ஆம்புலன்ஸில்தான் எனவும் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையினர் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் நிலையில், எந்த கவனக்குறைவும் ஏற்படக்கூடாது. அதனால்தான் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு