Published:Updated:

`மும்பை டு அலகாபாத்; 1200 கி.மீ தூரம்!’- சொந்த ஊருக்குச் செல்ல வெங்காய வியாபாரியான மனிதர் #Lockdown

வெங்காயம்
வெங்காயம் ( Representational Image )

பாண்டேவின் இந்த முயற்சி சுவாரஸ்யமாக இருந்தாலும் லாக்டெளன் விதிகளை அவர் மீறியிருக்கிறார். மும்பையிலோ, அவரின் இந்தப் பயணத்தின்போதோ அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட லாக்டௌன் மார்ச் 23-ல் தொடங்கி, இரண்டாவது கட்டமாக மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் வேலை செய்து வந்த பலரும் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தன் சொந்த ஊருக்குப் போகும் ஆசையில் ஒருவர் செய்த காரியம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

அலகாபாத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பிரேம் மூர்த்தி பாண்டே, மும்பை விமானநிலையத்தில் பணிபுரிபவர். லாக்டெளன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் மும்பையில் இருந்தவர், சில நாள்களில் எல்லாம் சரியாகிவிடும் என அங்கேயே தங்கியிருந்தார். நாள்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகிக் கொண்டே போனது.

கொரோனா
கொரோனா

தான் வசித்து வந்த கிழக்கு அந்தேரியின் ஆசாத் நகர், மிகவும் நெரிசலான பகுதி, அங்கே கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்த அவரின் மன் கண்டிப்பாகச் சொந்த ஊருக்குத் திரும்பியே ஆக வேண்டும் எனத் துடித்தது. ஆனால், லாக்டெளன் சமயத்தில் மும்பையில் இருந்து 1,400 கி.மீ தொலைவில் உள்ள அலகாபாத்துக்கு எப்படிச் செல்வது? பேருந்து, ரயில், விமானம் என அத்தனை போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வழி இருந்தாக வேண்டும் என யோசித்த பாண்டேவுக்கு அத்தியாவசிய பொருள்கள் செல்வதற்குத் தடையில்லை என்கிற செய்தி தெரியவந்திருக்கிறது. மகிழ்ச்சியுடன் ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். ஏப்ரல் 17-ம் தேதி மினி ட்ரக் ஒன்றை வாடகைக்கு எடுத்து 200 கி.மீ ஓட்டிச் சென்று நாசிக்கின் பிம்பெல்கானை அடைந்துள்ளார். அங்கு ரூ.10,000-க்கு தர்பூசணி பழங்களை வாங்கியவர் சரக்கோடு சேர்த்து வண்டியை மும்பைக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். அங்கு அவர் முன்னதாகவே ஒப்பந்தம் செய்திருந்த வியாபாரி சரக்கைப் பெற்றுக்கொண்டுள்ளார். அடுத்து பிம்பெல்கானில் வெங்காயம் வாங்குவதென்று முடிவெடுத்த பிரேம் 25,520 கிலோ வெங்காயங்களை ஒரு கிலோ ரூ.9.10 ரூபாய் என வாங்கிக் கொண்டார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூ.2.32 லட்சம்.

Representational Image
Representational Image

பிம்பெல்கானிலிருந்து மீண்டும் ஒரு வண்டியை ரூ.77,500-க்கு வாடகைக்கு எடுத்தவர் ஏப்ரல் 20-ல் வெங்காய மூட்டைகளுடன் 1,200 கி.மீ தொலைவில் உள்ள அலகாபாத்தை நோக்கி புறப்பட்டிருக்கிறார். ஏப்ரல் 23-ல் அலகாபாத்தை அடைந்த அவர், நேராக புறநகரில் உள்ள முண்டேரா என்கிற மொத்த விற்பனைச் சந்தையை அடைந்து வெங்காயத்தை விற்க முயன்றிருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நல்ல விலை கிடைக்காமல் போகவே இரண்டு கி.மீ தள்ளி உள்ள தன் சொந்த கிராமமான கோட்வா முபர்க்பூருக்கு வண்டியை ஓட்டிச் சென்று ஒருவழியாகத் தன் வீட்டை அடைந்திருக்கிறார்.

பாண்டேவின் இந்த முயற்சி சுவாரஸ்யமாக இருந்தாலும் லாக்டெளன் விதிகளை அவர் மீறியிருக்கிறார். மும்பையிலோ, அவரின் இந்தப் பயணத்தின்போதோ அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதை உணர்ந்த அவர், மறுநாள் தாமாகவே தூம்கஞ்ச் காவல் நிலையத்துக்குச் சென்று தன் பயணத்தை விளக்கி இருக்கிறார். பாண்டேவை அங்குள்ள மருத்துவக்குழு பரிசோதித்தது. பின்பு மாநிலம் விட்டு மாநிலம் வந்திருப்பதால், பாதுகாப்புக்காக அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். தற்போது காய்கறிச் சந்தை முழுக்க மத்தியப் பிரதேசத்தின் சாகரிலிருந்து வந்திருக்கும் வெங்காயங்கள் குவிந்துள்ளதால் அவை விற்றுத் தீர்ந்த பின்பு, தன் வெங்காயங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் பாண்டே.

அடுத்த கட்டுரைக்கு