Published:Updated:

`கேட்பாரற்றுக் கிடக்கும் கடத்தல் தங்கம்!’- கொரோனா நிதிக்குப் பயன்படுத்த யோசனை சொல்லும் ஆர்வலர்

தங்க நகைகள்
தங்க நகைகள்

`சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படும் நகைகளை மூன்று வருடத்திற்குள் அதற்கான உரிய ஆதாரங்களைக் கொடுத்துவிட்டால் அவற்றைத் திரும்ப ஒப்படைக்கலாம். இல்லாத பட்சத்தில் அதிகாரிகளே ஒரு அரசாணையை வெளியிடலாம்’

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நாம் பொருளாதார வளர்ச்சியில் 10 வருடம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் `கொரோனாவைத் தடுக்க நிவாரண நிதி தாருங்கள்’ என மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தநிலையில்,`மக்களிடம் நிதி கேட்கத் தேவையில்லை. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட வைரம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவற்றை ஏலம் விட்டாலே போதும், கொரோனா பிரச்னைக்குப் பயன்படுத்த முடியும்” என பிரதமர் மோடிக்கு ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!
சென்னையில் 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாட்டி வதைக்கும் பசியின் கொடுமையால் ஒரு பிடி சோற்றுக்குப் பிஞ்சு குழந்தைகளும் முதியோர்களும் வீதி விதியாகச் சுற்றித்திரியும் பரிதாப நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் வீரியமும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு வழியில்லாததால் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் உணவுக்கு வழியின்றித் தவித்து வருகின்றனர்.

தற்போது, கொரோனா வைரஸ் பெயரைக் கேட்டாலே அனைவரின் கண்களில் உயிர் பயம் மட்டுமல்ல.., வாட்டி வதைக்கும் பசியின் கொடுமையும் சேர்த்தே தெரிகிறது. இதைப் போக்க சுங்கத்துறை அதிகாரிகளால் பிடித்துவைத்திற்கும் நகைகள் மற்றும் பணத்தை அரசு கையில் எடுக்கவேண்டும் என்ற குரலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

கரிகால் சோழன்
கரிகால் சோழன்

மோடிக்குக் கடிதம் எழுதிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரிகால் சோழனிடம் பேசினோம். ``ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா கட்டுப்பாட்டில் மட்டும் 125 விமான நிலையங்கள் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட தங்கம், வைரம், வைடூரியங்கள் கோடிக்கணக்கில் கேட்பாரற்று சுங்கத் துறையின் பெட்டகங்களில் இருக்கின்றன.

வைர நகைகள்
வைர நகைகள்

கடந்த 2017-18-ல் சுங்கத்துறை அதிகாரிகளால் ரூ.89 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019-20-ம் ஆண்டின் முதல் காலாண்டில் (க்யூ 1 துறை) 1,197 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 972 கிலோவாக மொத்த இருப்பு இருந்தது. ரூ.1,500 கோடி மதிப்புள்ள 4,058 கிலோ (4 டன்னுக்கு மேல்), 2018-19 நிதியாண்டில் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டைக் கைப்பற்றியதை விட 25 சதவிகிதம் அதிகம் என்கிறார்கள். இதுவரையிலும் அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு மட்டும் 477, 51, 55,000 ரூபாயாகும். இந்த நிலையில் கடந்த 2013-14 முதல் 2015-16 வரை டெல்லி, மும்பை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் பிடிபட்ட நகைகள் சுங்கத் துறையின் பெட்டகங்களிலிருந்து காணாமல் போயுள்ளன. இதில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மதிப்பு 65.39 கிலோ என்கிறார்கள்.

டாலர்
டாலர்

சுங்கத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகைகள் எப்படி கொள்ளை போகும்? யாருடைய சொத்தை யார் கொள்ளையடிப்பது? அதிகாரிகள் கொள்ளையடித்துச் சென்ற இரு வழக்குகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதைத்தொடர்ந்து 2011 ஜனவரி முதல் 2020 மார்ச் மாதம் வரை வெளிநாட்டு சிகரெட் வகைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் சர்வதேசச் சந்தையின் மதிப்பு ரூ.51 கோடியே ஒரு லட்சத்து 6 ஆயிரம் ஆகும். வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், ரூ.21 கோடியே 24 லட்சத்து 95 ஆயிரம் பணத்தைப் பிடித்துள்ளனர். இதில் அமெரிக்க டாலர்களும் அடங்கும்.

கஞ்சா,ஹெராயின் போன்றவையும் கோடிக்கணக்கில் இருப்பதாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தெரிவித்துள்ளது. விமானநிலையங்களில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்புகளைத் தெரிந்துகொண்டு அதனை ஏலம் விட்டால் பல்லாயிரம் கோடி ஏலம் போகும். முந்தைய மன்னர்கள் காலத்தில்கூட இதுபோன்று நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி நெருக்கடியைச் சமாளித்துள்ளார்கள்.

`மொத்தமே 50 கிலோதான்!’ - ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதியில் வரலாறு காணாத வீழ்ச்சி

பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவாத பணம், நகைகள் எதற்கு? இந்தச் சொத்துகளை ஏலம் விடுங்கள். அதில் வரும் பணத்தைக்கொண்டு கொரோனா விவகாரத்தைக் கையாளுங்கள் என்று மன்னர்கள் காலத்தில் மக்களைக் கையாண்ட விதத்தை மேற்கோள் காட்டி புள்ளிவிவரங்களுடன் பிரதமருக்கு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கிறேன்" என்றார்.

இதுகுறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம். ``சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட நகைகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கே.எஸ் நரேந்திரன்
கே.எஸ் நரேந்திரன்

ஏலம் விட்டுத்தான் மக்களைக் காக்கவேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு தற்போது இல்லை சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. போதிய நிதியும் கையிருப்பில் உள்ளது” என்று முடித்துக்கொண்டார்.

ஏலம் விடுவது எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து வழக்கறிஞர் ஜீவக்குமாரிடம் பேசினோம். ``இதுபோன்று சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படும் நகைகளை மூன்று வருடத்திற்குள் அதற்கான உரிய ஆதாரங்களைக் கொடுத்துவிட்டால், அவற்றைத் திரும்ப ஒப்படைக்கலாம்.

வழக்கறிஞர் ஜீவக்குமார்
வழக்கறிஞர் ஜீவக்குமார்

இல்லாத பட்சத்தில் அதிகாரிகளே ஒரு அரசாணையை வெளியிட்டு, அந்த நகைகளை ஏலம் விடலாம். இதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது. இது எகனாமிக் எமர்ஜென்சி ப்ரியர்ட். அரசு நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம். இதற்கென ஒரு டீம் இருக்கிறது. கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என ஏலம் விடும் வேலைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு