கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் உயிர்ச்சேதம், பொருளாதார இழப்புகளைக் கொடுத்தது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்தத் தொற்று, பல லட்சம் உயிர்களை பலிகொண்டது. அரசின் தொடர் முயற்சி, சிகிச்சைகள், தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவந்த நிலையில், தற்போது சீனாவில் திரும்பவும் கொரோனோ தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று மத்திய அரசு, சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனைகள் கட்டாயம். மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் சர்வதேசப் பயணிகளுக்கும் ஏர் சுவிதா எனும் சுய-அறிவிப்பு படிவம் அதாவது, ஆரோக்கியம் மற்றும் பயண ஆவணப் படிவங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்படும். கொரோனா புதிய வேரியன்ட் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது உள்ளிட்ட விமானங்களில் பயணம் செய்வோருக்கான பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.