Published:Updated:

`ஹேய், கொரோனா..!’ -டெல்லியில் வடகிழக்கு மாநில இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பாதிக்கப்பட்ட இளம் பெண்
பாதிக்கப்பட்ட இளம் பெண்

நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மற்ற மக்கள் சந்தேத்துடன் புறக்கணிப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்கள், வடகிழக்குப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

இந்தியாவில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 415 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 7 பேர் கொரோனா காரணமாகப் பலியாகியுள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

நாடு முழுவதும் சுமார் 82 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், இன்று நாட்டின் பல பகுதிகளில் மக்கள் சகஜமாக வலம்வருகின்றனர். டெல்லியில் பேருந்து இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிடைக்கும் பேருந்துகளில் மக்கள் அதிக நெருக்கத்தில் பயணிப்பதாகத் தகவல் வருகிறது. இதனால் மீண்டும் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் சுகாதாரத்துறை அதிகார்கள்.

பிரதமர் மோடியும் இன்று ட்விட்டரில், ``பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த லாக்-டவுன் நடவடிக்கையைத் தீவிரமாகப் பின்பற்றவில்லை. நீங்கள், உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்... உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். தயவுசெய்து வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். நாட்டில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு, மக்களின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

`ஹேய், கொரோனா..!’ -டெல்லியில் வடகிழக்கு மாநில இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இந்த நிலையில், டெல்லியில் கொரோனா காரணமாக இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வடக்கு டெல்லியிலிருந்து விஜயநகர் பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இளம் பெண்ணைத் திட்டியதாகத் தெரிகிறது.

அந்த பெண்ணை அவர்,`கொரோனா’ என அழைத்தது மட்டுமல்லாமல், அவர் மீது புகையிலை எச்சிலை உமிழ்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், காவல் துறையில் புகார் அளித்துள்ளார். நேற்று இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் தற்போது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சம்பவம், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

இந்த விவகாரம் முதலில் வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியபோதே, நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மற்ற மக்கள் சந்தேத்துடன் புறக்கணிப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்கள், வடகிழக்குப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர். இதற்குக் காரணம், வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் பார்ப்பதற்கு சீனர்கள் போன்று இருப்பதுதான்.

`அதிர்ச்சி’ அமெரிக்கா.. `லாக்-டவுன்’ ஈரோடு.. காரணம்..?' -கொரோனா அப்டேட்ஸ்

முன்னதாக, கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதால், பார்ப்பதற்கு வடகிழக்கு மாநில மாணவர்களும் இளைஞர்களும் சீனர்கள் போல் இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். அப்போது காவல் துறை சார்பில், `வடகிழக்கு மக்களுக்கு எந்த சிக்கல் நேர்ந்தாலும் புகார் அளிக்கலாம், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை யாரும் கிண்டல் கேலி செய்யக்கூடாது’ என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு