Published:Updated:

`டூல்கிட்' விவகாரம்: விசாரிக்கப்பட்ட ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி, யார் இவர்?

Twitter
Twitter ( STEPHEN LAM )

2019 ஏப்ரலில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக மனிஷ் மகேஸ்வரியை நியமித்தது ட்விட்டர். இதற்கு முன்னதாக நெட்வொர்க் 18 டிஜிட்டலின் தலைமை செய்ய அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த மாதம் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் 'டூல்கிட்' விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கடுமையாக ஒருவரை ஒருவர் சாடி ட்விட்டரையே ரணகளமாக்கிக் கொண்டிருந்தனர். அந்த விவகாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதிவிட்ட ட்வீட் ஒன்றை 'Manipulated media' எனக் குறித்தது ட்விட்டர். இதனால் குர்கானில் இருக்கும் ட்விட்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டது டெல்லி காவல்துறை. இந்த டூல்கிட் விவகாரத்தில் ட்விட்டருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா எனும் நோக்கத்தில் விசாரணையையும் மேற்கொண்டு வந்தது டெல்லி காவல்துறை.

மனிஷ் மகேஸ்வரி
மனிஷ் மகேஸ்வரி

இந்த நிலையில்தான் 'டூல்கிட்' விவகாரம் தொடர்பாக ட்விட்டரின் இந்திய நிர்வாக இயக்குநரான மனிஷ் மகேஸ்வரியிடம் கடந்த மே 31 அன்று டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அது சரி, யார் இந்த மனிஷ் மகேஸ்வரி?

2019 ஏப்ரலில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக மனிஷ் மகேஸ்வரியை நியமித்தது ட்விட்டர். இதற்கு முன்னதாக நெட்வொர்க் 18 டிஜிட்டலின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றிய இரண்டு வருடத்திலேயே 100 மில்லியனுக்கும் மேல் மாதாந்திர பயனாளர்கள், 12 மொழிகளில் பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரம், சந்தா உள்ளிட்ட பல்வேறு வகையில் வருவாய் என பல உயரங்களைத் தொட்டிருக்கிறது நெட்வொர்க் 18.

அதற்கு முன்னர் பிளிப்கார்டின் Merchant business and seller ecosystem-ன் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். இவரது தலைமையின் கீழ்தான் 10,000 விற்பனையாளர்களில் இருந்து 1,00,000 விற்பனையாளர்கள் இணைந்து அசுர வளர்ச்சி அடைந்தது பிளிப்கார்ட். அதற்கு முன்னர் txtweb என்ற SMS சார்ந்த அப்ளிகேஷன் ஒன்றிற்கும் துணை நிறுவனராக இருந்துள்ளார். மேலும், இன்டுய்ட், மெக்கின்ஸி மற்றும் பி&ஜி (ப்ராக்டர் அண்டு கேம்பிள்) உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

Twitter | ட்விட்டர்
Twitter | ட்விட்டர்

'டூல்கிட்' விவகாரம் மட்டுமின்றி, உத்திரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் ட்விட்டர் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. இதில் அந்த விவகாரம் தொடர்பாகப் பதிவிடப்பட்ட ட்வீட்கள் பொய் என்று தெரிந்தும் அதனை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனிஷ் மகேஸ்வரியின் மீது வழக்கறிஞர் அமித் ஆச்சாரிய திலக் மார்ஃக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களுடன் ஸ்வரா பாஸ்கர் மற்றும் பத்திரிகையாளர் அர்ஃபா கனும் ஷெர்வானி ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு