Published:Updated:

`ராகுலால் ராஜினாமா முடிவெடுத்தாரா மன்மோகன்?’ - மான்டேக் சிங் அலுவாலியா புத்தகம் கிளப்பிய சர்ச்சை

ராகுல் - மன்மோகன் சிங்
ராகுல் - மன்மோகன் சிங்

ராகுல் காந்தியின் செயலால் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தன் பதவியை ராஜினாமா செய்ய நினைத்ததாக முன்னாள் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பொருளாதார நிபுணராகவும் மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர் மான்டேக் சிங் அலுவாலியா. அரசு ஊழியராக இருந்த இவர் 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சியமைத்ததும் தன் பணியை ராஜினாமா செய்தார். தற்போது இவர் `Backstage: The Story behind India's High Growth Years’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

பேக்ஸ்டேஜ்  புத்தகம்
பேக்ஸ்டேஜ் புத்தகம்

அதில், தான் பணியாற்றியபோது இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரம், அரசியல் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். இவர் மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தபோது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தன் பதவியை ராஜினாமா செய்ய நினைத்ததாகத் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2013-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதில் தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால் அவர்கள் சம்பளம் அல்லது வாக்களிக்கும் உரிமையின்றி தொடர்ந்து பதவிகளில் தொடர அனுமதி அளிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.

அலுவாலியா
அலுவாலியா

அப்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து அதன் நகலைப் பத்திரிகையாளர்கள் முன்பு கிழித்தெறிந்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது.

இதைக் குறிப்பிட்டுள்ள அலுவாலியா, `இந்தச் சம்பவம் நடக்கும்போது பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணத்திலிருந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன். அதேநேரம் எனது சகோதரரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சஞ்சீவ், பிரதமர் பற்றி கடுமையாக விமர்சித்துக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதை இமெயில் மூலம் எனக்கு அனுப்பி, நான் அதன் மூலம் தர்மசங்கடம் அடைய மாட்டேன் என்று நம்புவதாகவும் கூறினார்.

`சுறுசுறுப்பாக உழைத்தார்..!’ - நிதித்துறைக்கு மன்மோகன் சிங்கை பரிந்துரைத்த வெங்கைய நாயுடு

கட்டுரையைப் படித்ததும் அந்த விஷயத்தை முதலில் என் மூலமாகவே பிரதமருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து அவரிடம் காட்டினேன். அவர் மிகவும் அமைதியாகக் கட்டுரை முழுவதையும் படித்து முடித்துவிட்டு எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார். பின்னர் திடீரென, `என் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

நான், அவரின் கேள்வியைப் பற்றி சற்று யோசித்துவிட்டு, `இந்த பிரச்னையில் ராஜினாமா செய்வது பொருத்தமாக இருக்காது’ என்று பதில் அளித்தேன். அவருக்கு நான் நேர்மையான ஆலோசனை வழங்கினேன் என்று நம்புகிறேன்” எனப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் செயலால் மன்மோகன் சிங் ராஜினாமா செய்யும் மனநிலையில் இருந்ததாக அலுவாலியா தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது தற்போது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு