Published:Updated:

`கொரோனா நெகட்டிவ், சில முடிவுகளுக்கு வெயிட்டிங்!’ - மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

87 வயதான மன்மோகன் சிங், ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் இதய நோயினால் பாதிப்படைந்துள்ளார். 2009-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் 1990-ம் ஆண்டு இங்கிலாந்திலும் இருமுறை இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அவருக்குக் காய்ச்சல் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அவர் உட்கொண்ட மருந்து ஒன்று, எதிர்வினை ஆற்றியதால் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவருக்குக் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியிட்டது.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கார்டியோ தெராசிக் சயின்ஸ் பிரிவில் மருத்துவர்களில் தொடர் கண்காணிப்பில் மன்மோகன் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் ஒருசில நாள்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அவர் தனிநபர் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவு அறிக்கையின் படி அவருக்குக் கொரோனா இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது அவருக்குக் காய்ச்சல் குறைந்து வருவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உடல்நிலை சார்ந்த சில முக்கியமான பரிசோதனைகள் அவருக்கு செய்யப்பட்டன. அவற்றில் சில முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 87 வயதான மன்மோகன் சிங், ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் இதய நோயினால் பாதிப்படைந்துள்ளார். 2009-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் 1990-ம் ஆண்டு இங்கிலாந்திலும் இருமுறை இருதய அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி! #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு