Published:Updated:

`இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்

ஆந்திரா காஸ் கசிவு
ஆந்திரா காஸ் கசிவு ( AP )

விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட காஸ் கசிவால் பாதிக்கப்பட்டு, இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில், இன்று காலை முதல் ஆந்திர மக்களை வேறு ஒரு பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடேஷ் பட்டினம் என்ற கிராமத்துக்கு அருகிலிருந்த எல்.ஜி பாலிமர் இந்தியா என்ற தெர்மக்கோல் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது.

அந்தச் சமயத்தில், சுற்றுப் பகுதிகளில் உள்ள அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததால் பாதிப்பின் தீவிரத்தை அவர்கள் உணரவில்லை. தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல, உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளனர். அப்போது, காற்றோட்டமாக இருக்கலாம் என வெளியில் வந்தபோது, பெரும் துர்நாற்றம் வீசியுள்ளது.

ஆந்திரா கேஸ் கசிவு
ஆந்திரா கேஸ் கசிவு
AP

அந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என அறியாமல் மக்கள் திகைத்து நின்ற வேளையில், அவர்களின் கண் மற்றும் உடலில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டுள்ளது. அதிகாலைல் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்த மக்கள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாலையில் அப்படியே விழுந்துகிடந்துள்ளனர். பின்னர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்துதான் தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த தொழிற்சாலையைச் சுற்றியிருந்த 3-4 கிராமங்களுக்கு வாயு பரவி 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துவிட்டனர். விரைந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், ஒலிபெருக்கி மற்றும் போலீஸ் சைரன் மூலம் மக்களை எச்சரித்து, அனைவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

தொடர்ந்து மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த மக்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதற்காகவும் காத்திருக்காத மாவட்ட நிர்வாகம், மக்களையும் காவல்துறையினரையும் உஷார்படுத்தி, தங்களுக்குக் கிடைக்கும் வாகனத்தில் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல கூறியுள்ளது. அதேபோல், ஆந்திராவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே இயங்கி வருகின்றன. தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

ஆனால், இன்று விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்ததும், விசாகப்பட்டினத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் வசதிகளுடன் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை உள்ளது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதால், விசாகப்பட்டினத்தில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா கேஸ் கசிவு
ஆந்திரா கேஸ் கசிவு
AP

இந்தச் சம்பவம் பற்றி விசாகப்பட்டினம் டி.ஜி.பி உதயபாஸ்கர் கூறும்போது, “காலை 5 மணிக்கு வாயுக் கசிவு தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்தது. தகவல் அறிந்து நாங்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் நிறைய மக்கள் சாலையிலேயே மயங்கிவிட்டனர். நாங்கள், மீதமுள்ள அனைவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றினோம். பின்னர், தொழிற்சாலையில் காஸ் கசிவு கண்டறியப்பட்டு, 90% சரி செய்யப்பட்டுவிட்டது.

கிராமத்தில் கசிந்த வாயுவை, வேறு வாயு தெளித்து அதுவும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆர்.ஆர். வெங்கடேசப்பட்டினத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, தொழிற்சாலையில் வாயுக் கசிவு முழுவதுமாக சரி செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட பின்னரே மக்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

`சாலையில் மயங்கி விழுந்த மக்கள்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ -ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு

ஆர். ஆர். வெங்கடேசபட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 பேர் தொழிற்சாலைக்கு அருகிலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகள், தெரு நாய்கள் போன்றவையும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெங்கடேசப்பட்டினத்தில், தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்த மரங்கள், இலைகள் வாயுக் கசிவால் கருகியுள்ளன. தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறியது மற்றும் கவனக்குறைவே வாயுக் கசிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலை
தொழிற்சாலை
AP

வாயுக் கசிவை நேரில் பார்த்த மக்கள் கூறும்போது, “இன்று அதிகாலை 3 மணியளவில் காஸ் கசிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்ததால் யாரும் அதை அறியவில்லை, அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் எல்லாம் முடிந்து மனித இறப்புகளும் ஏற்பட்டுவிட்டன. வாயு வெளியேறியதால் இந்தப் பகுதி முழுவதுமே புகை மூட்டமாகக் காட்சியளித்தது.

நாங்கள் எங்கு ஓடுவது என்றே தெரியாமல் தி்ணறினோம். இந்தப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம். நாங்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதும் அந்த தொழிற்சாலை நிர்வாகம்மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகாவது அவர்கள்மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

மற்றொருவர், ‘ நான் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறேன். ஆ.ஆர்.வெங்கடேசபட்டினத்தில் வசிக்கும் என் சகோதரன், இன்று அதிகாலை எனக்கு போன் செய்து, அனைத்து வீடுகளிலும் காஸ் கசிவு ஏற்பட்டதாகவும் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறும் கூறினார். தகவல் அறிந்து நாங்கள் காரில் இங்கு வந்தோம். வரும் வழி முழுவதும் நாங்கள் பார்த்த காட்சி மிகவும் கோரமாக இருந்தது. சினிமாவில் பார்ப்பது போல் சாலை, ஆற்றுப் பகுதி, வயல் வெளிகள் போன்ற பல இடங்களில் அப்படியே மக்கள் விழுந்துகிடந்தனர். எங்கள் கண் முன்னால் நடந்துவந்த சிலர், அதே இடத்திலேயே நடக்க முடியாமல் மயங்கி விழுந்தனர். என்னால் நடந்ததை நம்பவே முடியவில்லை” என்று விவரித்துள்ளார்.

தற்போதுவரை கிடைத்த தகவலின்படி, தொழிற்சாலையிலிருந்து வெளியேறியது ஸ்டைரீன் (styrene) வாயு எனக் கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய நச்சுத்தன்மைகொண்டது. பிசுபிசுப்பான நிறமற்ற திரவ நிலையில் இருக்கும் இந்த வாயு கசிந்தால், துர்நாற்றம் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவத்துக்குப் பிறகு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 12 மணிக்கு விசாகப்பட்டினம் வந்தடைந்தார். அவர், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
Twitter

ஆந்திராவில் ஏற்பட்ட வாயுக் கசிவு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர முதல்வரை போனில் அழைத்துப் பேசி, தகவல் அறிந்துள்ளார். மேலும், `நாட்டு மக்கள் அனைவரும் விசாகப்பட்டினம் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்' எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் வாயு கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதில், ‘தொழிற்சாலையில் 2 பெரிய டேங்குகள் இருந்துள்ளன. அவை ஊரடங்கு காரணமாக பல நாள்களாக இயக்கப்படாமலேயே இருந்துள்ளது. அதனால் டேங்குகளில் முன்னதாக இருந்த வாயுவில் வேறு வினை ஏற்பட்டு மாற்றமடைந்துள்ளது. பின்னர் இன்று காலை டேங்குகளை இயக்கும் போது அதிலிருந்து பெரிய அளவில் வெப்பம் வெளிப்பட்டு டேங்கில் விரிசல் உருவாகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விரிசலிலிருந்துதான் வாயு கசிந்து வெளியேறியுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு