Published:Updated:

`வனத்தில் சிந்திய ரத்தத்துக்குப் பதிலடி!'- `ஆபரேஷன் சமதன்' எதிர் போஸ்டரால் பதறிய கண்ணூர்

போஸ்டர்கள்
போஸ்டர்கள்

நள்ளிரவில் கண்ணூர்ப் பகுதியில், ஒரு பெண் உட்பட நான்கு மாவோயிஸ்ட்கள் நடமாடியது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் போஸ்டர்கள் ஒட்டிச்சென்றது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் வெளிப்படையான செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. நள்ளிரவில் கண்ணூர்ப் பகுதியில், ஒரு பெண் உட்பட நான்கு மாவோயிஸ்ட்கள் நடமாடியது, கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கண்ணூர்ப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் போஸ்டர் ஒட்டிச்சென்றது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடைக்கப்பட்ட ஜன்னல்கள்
உடைக்கப்பட்ட ஜன்னல்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீலகிரி, வயநாடு எல்லையோரப் பகுதிகளில் பழங்குடிகளையும் தோட்டத் தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் எஸ்டேட் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்போம் என சர்ச்சை நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வயநாடு மேப்பாடி பகுதி தனியார் விடுதியில் பழங்குடியினப் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாகக் கூறி அந்த விடுதியின் மீது தாக்குதல் நடத்திக் கண்ணாடிகளையும் ஜன்னல்களையும் உடைத்து கண்டன போஸ்டர்களை ஒட்டிச் சென்றனர்.

போஸ்டர்கள்
போஸ்டர்கள்

இந்த நிலையில் தற்போது கண்ணூர்ப் பகுதியில் 'வரும் 31ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்து, போஸ்டர்களை ஒட்டிச் சென்றுள்ளனர். அதில், ``வரும், 31ல் நடக்கும் பாரத் பந்த்துக்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பாலக்காடு வனத்தில் சிந்திய ரத்தத்துக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் வாழ்க்கையை நாசப்படுத்தி வரும் அரசுகளுக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” போன்ற வாசகங்களை எழுதியும் (war against people) மக்களுக்கு எதிரான போர் `ஆபரேஷன் சமதன்' என்று மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் `ஆபரேஷன் சமதன்'-க்கு எதிப்பு தெரிவித்து பிரதமர் மோடி, அமித் ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்களையும், ராணுவத்தையும் சித்திரித்து ஓவியங்களையும் வரைந்து போஸ்டர்களை ஒட்டிச் சென்றுள்ளனர்.

கேரள போலீசாரின் விசாரணையில் நள்ளிரவில் கண்ணூர்ப் பகுதியில், ஒரு பெண் உட்பட, நான்கு மாவோயிஸ்ட்கள் நடமாடியது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிகளுடன் நடமாடிய அவர்களைத் தேடி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு