Election bannerElection banner
Published:Updated:

எர்ணாகுளம் அருகில் இடித்துத் தள்ளப்படும் அப்பார்ட்மென்ட் குடியிருப்புகள்! -போராடும் 400 குடும்பங்கள்

அப்பார்ட்மென்ட்
அப்பார்ட்மென்ட்

பிளாட்டுகளில் குடியிருப்பவர்கள் நாளைக்குள் (15.09.2019) வெளியேற வேண்டும் என மரட் நகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. திங்கள் முதல் பிளாட்டுகளை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மரட் நகரசபா செயலர் ஆரிப்கான் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மரட் நகராட்சியில் நீர்நிலைகளையொட்டி, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஹோலி ஃபெய்த் அப்பார்ட்மென்ட், ஜெயின் ஹவுசிங், காயலோரம், ஆல்ஃபா வெஞ்சேழ்ஸ், ஹாலிடே ஹெரிட்டேஜ் ஆகிய ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒருமாதத்தில் இடித்து அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்பார்ட்மென்ட்
அப்பார்ட்மென்ட்

மரட் பகுதி முன்பு பஞ்சாயத்தாக இருந்த சமயத்தில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் 350 குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் இனியும் கேரளா தாங்காது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து பிளாட்டில் குடியிருப்பவர்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை என்று உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றும் எந்தப் பலனும் இல்லை. இந்தநிலையில் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துவதற்காக அங்கு குடியிருப்பவர்கள் நாளைக்குள் (15.09.2019) வெளியேற வேண்டும் என மரட் நகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. திங்கள்கிழமை முதல் குடியிருப்புகளை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மரட் நகரசபா செயலர் ஆரிப்கான் தெரிவித்துள்ளார்.

அப்பார்ட்மென்ட்
அப்பார்ட்மென்ட்

இதைத்தொடர்ந்து இன்று சி.பி.எம்., காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். தங்களுக்கு வேறு குடியிருப்புகள் கிடைக்கும் வரை வெளியேற மாட்டோம் என்று கூறி சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று மரட் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துகின்றனர். மேலும், நாளைமுதல் அப்பார்ட்மென்ட் வளாகத்தில் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு