Published:Updated:

மகாராஷ்டிரா: மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னை; மோடியை சந்தித்து பேசுகிறார் உத்தவ் தாக்கரே!

uddhav thackeray
uddhav thackeray

மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சென்று சந்தித்து பேச இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இருக்கும் மராத்தா இன மக்களுக்கு மாநில அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருந்தது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மகாராஷ்டிராவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மராத்தா இன மக்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். பாஜக எம்.பி.சாம்பாஜி யும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும். இதையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே செவ்வாய் கிழமை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார்.

Narendramodi
Narendramodi

ஏற்கனவே மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு உத்தவ்தாக்கரே கடந்த மாதம் கடிதமும் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது நேரில் சென்று சந்தித்து பேச இருக்கிறார். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது முந்தைய பாஜக அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து நான்கு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொங்கன் மற்றும் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இம்மழை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கும்படி முதல்வர் உத்தவ்தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். ஆபத்தான கட்டிடங்கள், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள், மழைநீர் தேங்கும் தாழ்வான வசிக்கும் மக்களை உள்ளுர் நிர்வாகம் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவேண்டும் என்றும் கொரோனா நோயாளிகள் யாரும் பாதிக்கப்படாத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தவ்தாக்கரே உத்தரவிட்டார். கனமழையின் போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேவைப்படும் இடங்களில் தயார்நிலையில் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.மழை நேரத்தில் மின் விநியோகத்தை கருத்தில் கொண்டு ஜெனரேட்டர்கள், ஆக்ஸிஜன் போதிய அளவு தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் என்று மருத்துவமனைகளை உஷார்படுத்தினார். முன்னதாக பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த மழை எச்சரிக்கை குறித்து உத்தவ்தாக்கரே ஆலோசனை நடத்தினார். பொதுவாக மும்பையில் மழை காலத்தில் புறநகர் ரயில் உள்பட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் குறைந்தது இரண்டு முறையாவது மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு மழை கொட்டித்தீர்க்கும். தற்போது வரும் 9ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு