Published:Updated:

`18 ஜாதகமும் சரியில்லை; கட்டணத்தை திருப்பிக் கொடுங்கள்'- மறுத்த மேட்ரிமோனி; அதிரடிகாட்டிய நீதிபதி

திருமணத்துக்கு வரன் பார்த்துத் தருவதாக உத்தரவாதம் அளித்து, அதை செய்யத் தவறிய நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.

திருமணம்
திருமணம்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம் முன்னோர்கள் கூறி பலமுறை கேட்டிருப்போம். ஆனால், இந்த காலகட்டத்தில் பெரும்பாலான திருமணங்கள், திருமண நிறுவனங்களினாலேயே நிச்சயிக்கப்படுகின்றன. மதம், சாதி, மாநிலம், மொழி ஆகிய அனைத்துக்கும் ஒரு இணையப் பக்கம் என ஏராளமான இணையத் திருமண நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவர்
மருத்துவர்

பஞ்சாபைச் சேர்ந்த ஒரு திருமண நிறுவனம், தங்கள் வேலையைச் சரியாக முடிக்கவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்தவர், சுரேந்தர் பால் சிங். இவரது மகள், மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். தன் மகளுக்கு நல்ல வரன் வேண்டும் எனக் கடந்த 2017-ம் ஆண்டு செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துள்ளார், சுரேந்தர்.

இதைப் பார்த்த திருமண நிறுவனம், தாங்களாகவே போன் செய்து ‘உங்கள் பெண்ணுக்கு நாங்கள் நல்ல வரன் பார்த்துத் தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சுரேந்தர் சிங்குக்கு பிடித்துப்போகவே, அந்த நிறுவனத்தில் தன் மகளுக்காக அப்ளிகேஷன் கொடுத்துள்ளார். அதில், தனக்கு எப்படியான மாப்பிள்ளை வர வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் கொடுத்து, அத்துடன் 50,000 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

திருமணம்
திருமணம்

அனைத்தும் நல்லபடியாக முடியவே, ‘இன்னும் 9 மாதத்தில் உங்கள் மகளுக்குத் திருமணம் நடக்கும்’ என அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் உத்தரவாதம் அளித்துள்ளது அந்தத் திருமண நிறுவனம். தாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் 18 ஜாதகங்களை அனுப்பியுள்ளனர். ஆனால், அதில் ஒன்றுகூட அந்தப் பெண்ணுக்குப் பொருந்தவில்லை. இதனால் கடுப்பான சுரேந்தர் சிங், அந்தத் திருமண நிறுவனத்திடம் தான் செலுத்திய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

Vikatan

அதற்கு மறுப்பு தெரிவித்த நிறுவனம், ‘ நீங்கள் அளித்துள்ள விவரங்களின்படி, எங்களால் வரன்களை அனுப்ப மட்டுமே முடியும். அது 100% பொருந்தும் எனக் கூறமுடியாது’ எனப் பதில் அளித்துள்ளார். கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற சுரேந்தர், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இரு தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார், நீதிபதி.

அபராதம்
அபராதம்

“இந்தத் தேவையில்லாத சுயம்வர விவரங்கள் அனைத்தும் மனுதாரரின் நேரத்தை வீணடித்துள்ளன. இதனால் அந்தப் பெண் மனதளவிலும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். திருமண நிறுவனம் தங்களின் வேலையை சரியாகச் செய்யத் தவறிவிட்டது. இதனால் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் தடைபட்டுள்ளது. எனவே, மனுதாரர் வழங்கிய கட்டணத் தொகையான 50,000 ரூபாய், இழப்பீடாக ரூ.7,000 மற்றும் வழக்கு செலவுகளுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது அந்தத் திருமண நிறுவனம்.