Published:Updated:

`உங்ககிட்ட இருந்தே தொடங்கலாம்...! - பாகிஸ்தான், சீனா முயற்சியை முறியடித்த சையது அக்பருதீன்

தினேஷ் ராமையா

தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும் என ஐ.நாவுக்கு இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.

Syed akbaruddin
Syed akbaruddin ( Twitter )

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளின் ஆதரவையும் பாகிஸ்தான் கோரியது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் ரகசிய ஆலோசனைக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்தன.

Syed akbaruddin
Syed akbaruddin
Twitter

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் அரிதாக நடைபெறும் இதுபோன்ற ரகசிய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் பேசினார்.

ரகசியமாக  காஷ்மீர் பற்றி விவாதிக்க வேண்டும் - ஐ.நா-வில் முறையிட்ட சீனா!

அவர் பேசுகையில், ``ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். இதில், எந்தவொரு வெளிநாடும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார். அப்போது, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா எப்போது முன்னெடுக்கும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அப்போது, தான் இருந்த இடத்தைவிட்டு அந்தப் பத்திரிகையாளரை நோக்கி சென்ற அக்பருதீன், ``இருக்கும் இடத்தைவிட்டு உங்களை நோக்கிவந்து கைகுலுக்குவதன் மூலம் அதைத் தொடங்கலாம்’’ என்றவாறே கைகுலுக்கினார்.

மேலும், அங்கிருந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் இருவரிடமும் அவர் கைகுலுக்கினார். அக்பருதீனின் இந்த நடவடிக்கை செய்தியாளர் சந்திப்பு அறையில் இருந்தவர்களிடையே புன்முறுவலை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில், ``சிம்லா உடன்படிக்கையின்படி செயல்படத் தயாராக இருக்கிறோம் என்று கூறியதன்மூலம் நாங்கள் நட்புக்கான கரத்தை ஏற்கெனவே நீட்டிவிட்டோம். அதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதற்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

`மாஸ் காட்டும் ஜெய்சங்கர்!’ - காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்படும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இந்தியா பதிலளிக்காதது குறித்தும் இருநாடுகள் இடையிலான தகவல் தொடர்பு இல்லாதது ஏன் என்பது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அக்பருதீன், `தீவிரவாதத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம்’’ என்றார். மேலும் அவர் பேசுகையில், ``ஜம்மு - காஷ்மீரில் மிகப்பெரிய பிரச்னை இருப்பதைப்போல் பாகிஸ்தான் கூறிவருகிறது. ஆனால், உண்மைநிலை முற்றிலும் மாறானது. ஒரு நாடு, இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது’’ என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.

Syed akbaruddin
Syed akbaruddin
Twitter

கூட்டத்துக்குப் பின் பாகிஸ்தான் மற்றும் சீன தூதர்கள் செய்தியாளர்களை சந்தித்து முதலில் பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்பருதீன், `முதல்முறையாக பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்குப் பின்னர் இரு நாடுகள் தங்கள் நாட்டின் ஈடுபாடுகளை சர்வதேச நாடுகளின் எண்ணங்களாக பிரதிபலிக்க முயற்சிக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டோம்’’ என்றார். ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதால், உலக நாடுகள் மத்தியில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டிருக்கிறது.