கடந்த வாரம் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவேரி விடுதியில், ராம நவமி அன்று அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினருக்கும் JNU மாணவர் சங்கத்தினருக்கும் இடையே நள்ளிரவில் கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக உருவெடுத்தது. இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். பின்னர் தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து காவேரி விடுதிக்கு வழக்கமாக இறைச்சி விற்பனை செய்துவரும் அப்சல் அகமது (Afzal Ahmed) அன்று நடந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ளார்.

அப்போது கூறிய அப்சல், சம்பவம் நடந்த அன்று எப்போதும் போல காலை 7:30 மணியளவில், மெஸ் செயலாளர் (mess secretary) அலைபேசியில் அழைத்து 25 கிலோ கோழி இறைச்சியை டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு பெயர் தெரியாத நபர் ஒருவர் 11 மணியளவில் அலைபேசியில் அழைத்து சிக்கன் டெலிவரி செய்யக்கூடாது என்று மிரட்டியுள்ளார். பின்னர் மீண்டும் ஒருவர் அழைத்து இறைச்சியைக் கொண்டுவருமாறு கூறினார். அதன்பின் சிக்கன் டெலிவரி செய்ய மெஸ் செயலர் மீண்டும் அழைத்துள்ளார். இதனால் குழப்பமடைந்த சிக்கன் வியாபாரி அப்சல் நேரில் சென்று பார்த்தபோது 4-5 நபர்கள் ஓடி வந்து 'இறைச்சியை அகற்றி உள்ளே வை. நீங்கள் கோழியுடன் உள்ளே செல்லக்கூடாது' என்று கூறியுள்ளனர். அங்கு சூழல் பதட்டமாக இருந்ததால் அப்சல் அங்கிருந்து சென்றதாக கூறினார்.
மேலும், 'தனிப்பட்ட முறையில் யாரும் எங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.பழைய ஜேஎன்யு மாணவர்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். அவர்கள் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் போன்றவர்கள். புதிய மாணவர்களும் சரியான நேரத்தில் நம்மை அறிந்து கொள்வார்கள். நானும் என் பையன்களும் வளாகத்தில் பாதுகாப்பாக இருப்போம் என்று நான் நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.
