Published:Updated:

`ஊடகங்கள் பேசும் காஷ்மீரின் நிலை!' - உண்மை நிலவரம் என்ன?

காஷ்மீர்
காஷ்மீர்

லடாக்கிலிருந்து தேர்வானவன் நான். நீங்கள் அல்ல. அமைதியாக உட்காருங்கள் என நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டார் லடாக் எம்.பி-யான ஜம்யாங் செரிக் நம்கி.

ஜம்மு-காஷ்மீர், அழகான பனிபடர்ந்த மலைகள் நிறைந்த மாநிலம். இதுதவிர உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்ன பிரச்னை என்பது பலருக்குத் தெரியாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர்தான் அந்த மாநிலம் தொடர்பான மசோதாவே நாடாளுமன்றத்தில் தாக்கலானது.

ஜம்யாங் செரிக் நம்கியால்
ஜம்யாங் செரிக் நம்கியால்

காஷ்மீர் மக்களின் குரல் என்னவாக இருக்கும் என அவரவர் தங்களுக்குத் தோன்றியதை பேசினர். மக்களவையிலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. அவர்களை நோக்கி ‘லடாக்கிலிருந்து தேர்வானவன் நான். நீங்கள் அல்ல. அமைதியாக உட்காருங்கள்’ என முழங்கினார் லடாக் எம்.பி-யான ஜம்யாங் செரிக் நம்கியால். மேலும், ``கார்கில் பற்றித் தெரிய வேண்டுமென்றால், ஜான்ஸ்கர், முல்பெக் ஷார்கோல் செல்ல வேண்டும். ஆர்யன் வேலி (Aryan Valley ) க்குச் செல்ல வேண்டும். 70% கார்கில் மக்கள் இந்த முடிவை வரவேற்கிறார்கள்'' என்றார்.

ஜம்மு-காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்களிலும் வெளிநாட்டு பத்திரிகைகளும் இருவேறு விதமாகத் தகவல்களைக் கூறி வருகின்றன. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் நடந்த போராட்டத்தில் 10,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றதாகச் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திக்கு உடனடியாக உள்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ``ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ரீநகரில் 10,000 பேர் போராட்டம் நடத்தியதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான புனையப்பட்ட செய்தி. ஸ்ரீநகர் பாராமுல்லா பகுதியில் 20 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்” எனக் கூறப்பட்டது.

பிபிசி மற்றும் அல்ஜசீரா உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில் காஷ்மீர் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் செய்தி வெளியிட்டது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரமாகவும் பதிவு செய்திருந்தது. எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்; சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சாலைகளில் செல்வது போன்ற வீடியோக்கள் வெளியானது. ஸ்ரீநகர் பகுதியில் இந்த ஊர்வலம் நடைபெற்றதாகச் செய்தி வெளியானது. ``சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது ஏற்கத்தக்கதல்ல” என்ற பதாகைகளும் கையில் வைத்திருந்தனர்.

அல்ஜசீரா

அல்ஜசீரா தனது செய்தியில் 10,000 பேர் எனக் கூறியிருந்தது. ஆனால், உள்ளூர் நிர்வாகம் 300 பேர் ஊர்வலமாகச் சென்றதாகத் தெரிவித்துள்ளது.

பிபிசி

பிபிசியின் வீடியோவில் மக்கள் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்; அவர்கள் பாதுகாப்புத் துறையினரால் விரட்டப்படுகின்றனர் என்றது.

Asian News International (ANI)

ஏ.என்.ஐ (Asian News International) வெளியிட்ட செய்தியில், ஸ்ரீநகர் அமைதியாக இருப்பதாகவும் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை எனவும் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் மக்கள் வீதிகளில் சகஜமாகச் செல்வது ஏடிஎம்களில் பணம் எடுக்க காத்திருப்பது, சாலைகளில் வாகனங்கள் செல்வது என இடம் பெற்றன. ஸ்ரீநகரில் மக்கள் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்களையும் பதிவிட்டது.

PTI

பிடிஐ (Press Trust of India) வெளியிட்ட புகைப்படங்களில் பெரும்பாலும் காலியான தெருக்களும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ஸ்ரீநகர் மார்க்கெட் பகுதிகள் காலியாக இருப்பதாகப் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. சட்டப்பிரிவை நீக்கியதை காஷ்மீர் பெண்கள் கொண்டாடுவதாகச் சில இந்திய செய்தி நிறுவனங்களும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஸ்ரீநகரில் இந்தச் சட்டப்பிரிவு ரத்துக்கு எதிராகப் பெண்கள் முழக்கமிடும் புகைப்படங்களும் அதில் இருந்தன.

இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் மக்களுக்கு வெவ்வெறு கதைகளைக் கூறுகின்றன. எதைச் செய்தியாகக் காட்ட வேண்டும் என்பதை ஓர் ஊடகம்தான் தேர்வு செய்கிறது. இயல்புநிலையைக் காட்ட முற்படுபவர்கள் டால்கேட், பவுல்வர்டு ரோட் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளையும் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், `ஜம்மு-காஷ்மீர் இயல்பாகத்தான் உள்ளது. இதுவரை எந்த அசம்பாவிதங்கள் குறித்தும் புகார் தெரிவிக்கப்படவில்லை' என்று கூறியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு