Published:Updated:

துரத்தியடித்த வாழ்க்கையை திருப்பியடித்த ஆனி சிவா... பீச்சில் ஜூஸ் விற்றவர் போலீஸ் எஸ்ஐ ஆனது எப்படி?

போலீஸ் எஸ்.ஐ ஆனி சிவா
போலீஸ் எஸ்.ஐ ஆனி சிவா

"நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது ஒருத்தரை காதலிச்சு, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஃபைனல் இயர் படிக்கும்போது எட்டுமாசக் கைக்குழந்தையோட அவர் என்னை தனியா விட்டுவிட்டு போயிட்டார்."

"பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எலுமிச்சை ஜூஸும், ஐஸ் கிரீமும் வித்துக்கிட்டு இருந்த அதே ஏரியால இப்ப போலீஸ் சப் இன்ஸ்பெக்டரா நிக்குறேன்.''

இப்படி ஒரு ஃபேஸ்புக் பதிவு மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆனி சிவா. திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக கடந்த 25-ம் தேதி நியமிக்கப்பட்டவர் ஆனி சிவா. அவரது வேண்டுகோளுக்கு இணங்க நேற்று (ஜூன் 27) கொச்சி சிட்டிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

நெய்யாற்றின்கரை பகுதியை பூர்வீகமாகக்கொண்ட 31 வயது ஆனி சிவாவிற்கு திருமணம், வேலை, பிசினஸ் என அனைத்துமே எதிர்பார்த்ததுபோல அமையவில்லை. ஆனால், ஒரே மகனுடன் பத்து ஆண்டுகளாகப் போராடி போலீஸ் எஸ்.ஐ ஆகி சாதித்துக்காட்டியிருக்கிறார் ஆனி.

மகனுடன் ஆனி சிவா
மகனுடன் ஆனி சிவா

ஆனி சிவா-விடம் பேசினேன். "நான் காலேஜ்ல படிக்கும்போது ஸ்போர்ட்ஸ்ல அதிக ஆர்வமா இருந்தேன். என்னை ஐ.பி.எஸ் ஆக்கணும்னு என்னோட அப்பா ஆசைப்பட்டார். ஆனா, நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது ஒருத்தரை காதலிச்சு, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஃபைனல் இயர் படிக்கும்போது எட்டுமாசக் கைக்குழந்தையோட என்னை தனியா விட்டுவிட்டு போய்ட்டார் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணவர். திரும்ப எங்கப்போறதுன்னு தெரியல. என் பெற்றோரும் என்னை ஏத்துக்கல. என் பாட்டியோட குடிசை வீட்ல தங்கி வீடு வீடா சமையல் பொடி விற்க ஆரம்பிச்சேன். ஆனா, சரியா வியாபாரம் பண்ண முடியல.

அடுத்ததா இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டானேன். அதுல மாசம் 3500 ரூபாய் சம்பளம் கிடைச்சது. வீட்டு வாடகைக்கு 3000 ரூபாய், மகனை டே கேர் சென்டர்ல விடுறதுக்கு 400 ரூபாய் ஃபீஸ் போக நூறு ரூபாயே மிஞ்சும். அதனால, அந்த வேலையும் செட் ஆகல. இன்ஷூரன்ஸுக்கு போனப்போ ஒரு அக்கா அறிமுகம் ஆனாங்க. அவங்களோட சேர்ந்து வர்க்கலா பீச்ல எலுமிச்சை ஜூஸ், ஐஸ்கிரீம் விற்கத் தொடங்கினேன். ஆனா, அந்த அக்காவோட கணவர் குடிகாரர். நாங்க சம்பாதிக்கிற பணத்தை அவர் எடுத்துட்டு போய்டுவார். அதனால இந்த முயற்சியும் கைகொடுக்கல.

அன்னைக்கு வர்க்கலாவுல என் பணத்தையும், உழைப்பையும் இழந்து கண்ணீரோடு நின்னேன். பத்து வருஷத்துக்குப் பிறகு அதே பகுதியில் எஸ்.ஐ-யாக வந்ததால் என் மனதில் இருந்த பழைய நினைவுகளின் அணை உடைந்தது. அதனால் ஃபேஸ்புக்கில் அந்தப் பதிவை போட்டேன். அது இவ்வளவு வைரல் ஆகும்னு நினைக்கல. எல்லோரும் என்னை பாராட்டினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" எனத் தழுதழுத்தார்.

ஆனி சிவா
ஆனி சிவா

"வர்க்கலா சம்பவத்துக்கு அப்புறம் என் உறவினரான ஷாஜி 2014-ல் கேரளத்தில் முதன் முறையா பெண்களுக்கான நேரடி எஸ்.ஐ தேர்வு அறிவிச்சிருக்கிறதா சொன்னார். அப்போ எனக்கு 24 வயசு. எஸ்.ஐ தேர்வுக்கு ஒன்றரை மாசமே இருந்த நிலைமையில உறவினரின் உதவியோட எக்ஸாமுக்கு தயாரானேன். தினமும் 20 மணிநேரம் படிச்சு எஸ்.ஐ தேர்வுல ஜெயிச்சேன். ஆனாலும் போஸ்ட்டிங் வாங்குறதுக்கு ஐந்து ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

இதுக்கு நடுவுல கான்ஸ்டபிள் தேர்வு எழுதி அதுல வெற்றிபெற்றேன். போலீஸ் பணியில் இருக்கும்போதே எஸ்.ஐ போஸ்ட்டிங் கிடைத்தது. நான் என் மகனுடன் தனியாக வசித்தபோது சில ஆண்களின் வக்கிர பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக என் முடியை வெட்டிக்கொண்டேன். என்னையும் என் மகனையும் பார்த்து அண்ணன், தம்பி என்றே பலரும் நினைக்கிறார்கள். இப்போது என் மகன் கொச்சியில் படிப்பதால் இங்கு மாற்றல் கேட்டேன். அதிகாரிகள் மாற்றல் கொடுத்திருக்கிறார்கள். அன்று பாதுகாப்பு இல்லாமல் இருந்த நான் இன்று மக்களை பாதுகாக்கும் பணியில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்" என்றார்.

வாழ்த்துகள் ஆனி சிவா!

அடுத்த கட்டுரைக்கு