Published:Updated:

`என் புகழுக்குக் காரணமானவர் ஒரிஜினல் கோலிதான்!’ - யார் இந்த `டூப்ளிகேட் கோலி’ செளரப்?

இந்த ஒரிஜினல் விராட் கோலி போட்டிகள், விளம்பரங்கள் என ஒருபுறம் பறந்துகொண்டிருக்க, இவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு டூப்ளிகேட் கோலி சமீபத்தில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறார்.

செளரப் கேட்
செளரப் கேட் ( Twitter )

விராட் கோலி, இந்த உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரைத் தெரியாமல் இருக்க முடியாது. மனிதர் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் என்றால், விளம்பரப்படங்களில் நடிப்பதில் அதே அளவு பிஸி. இவர் பிராண்ட் தூதராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் மிக நீளம். இந்த ஒரிஜினல் விராட் கோலி போட்டிகள், விளம்பரங்கள் என ஒருபுறம் பறந்துகொண்டிருக்க, இவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு டூப்ளிகேட் கோலி பிரபலமாகி தற்போது மிக பிஸியாக உலா வந்துகொண்டிருக்கிறார்.

செளரப் கேட்
செளரப் கேட்
Twitter

யார் இந்த டூப்ளிகேட் கோலி ?

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த செளரப் கேட் (saurab gade) என்பவர் பார்க்க அப்படியே இந்திய கேப்டன் கோலியைப் போலவே தோற்றமளிக்கிறார். JCB நிறுவனத்தில் ஜூனியர் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த இவரின் வாழ்க்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மற்றவர்களைப்போல மிக சாதாரணமாகத்தான் இருந்து வந்தது. கடந்த மே மாதத்தில் மகாராஷ்ட்ராவின் ஷிரூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடக்கவிருந்த பஞ்சாயத் போர்டு தேர்தலுக்காகப் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தனது பிரசாரத்துக்கு விராட் கோலி வருவதாக அறிவித்தார். ஆனால், அங்கு வந்ததோ செளரப் .

ஆட்டோகிராப் , செல்ஃபி என ஓவர் நைட்டில் பிரபலமானார். இதன் பிறகு, இவர் வெளியில் நடமாடினாலே மக்கள் இவருடன் அதிக அளவில் போட்டோ எடுத்துக்கொள்ளத் தொடங்கினர். இது குறித்து செளரப் கூறுகையில், ``என் கல்லூரியில் நண்பர்கள் நான் விராட் கோலியைப்போல இருப்பதாகக் கூறிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என் நண்பன் ஒருவன் எங்கள் பகுதி எம்.எல்.ஏ-வுக்கு என் புகைப்படத்தை அனுப்பியதுதான் இன்று என் வாழ்க்கையையே மாற்றியுள்ளது” என்று கூறும் இவரின் முகத்தை புனேவில் ஒரு பேக்கரி, தனது கேக்கில் பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

செளரப் கேட்
செளரப் கேட்
Twitter

மேலும் ஒரு சிறிய அளவிலான ஆடை வடிவமைப்பு நிறுவனம் அதன் விளம்பரத்துக்கு விராட் கோலி போன்ற இவரை போட்டோ ஷூட் செய்துள்ளது. ஆனால் இவ்வளவு புகழ் பெற்றுள்ள, இந்த சௌரப்புக்கு ஒரு கவலையாம். `தன் புகழுக்குக் காரணமான கோலியை இன்னமும் சந்திக்கவில்லை’ என்பதே அது. அதற்காக அவர் பல முறை முயன்றும் நிறைவேறவில்லையாம். மிக விரைவில் அவரை சந்தித்தே தீருவேன் என்கிறார் இந்த `கோலி’ ஜெராக்ஸ்.