Published:Updated:

‘வெளிநாட்டுப் பயணம் இல்லை; ஆனால் முதல் பலி’ -மருமகனால் மேகாலயா மருத்துவருக்குப் பரவிய கொரோனா?

இறப்பு
இறப்பு

மேகாலயாவைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்தார்.

மேகாலயாவின் ஷில்லாங்கில், 69 வயது மருத்துவர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஜான் எல் சைலோ ரின்டாதியாங் என்ற மருத்துவர், பெத்தானி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கடந்த திங்கட்கிழமை, இவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஷில்லாங் அரசு உறுதி செய்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வடகிழக்கு மாநிலமான அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரியில், 65 வயது முதியவர் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்ததை அடுத்து, இன்று உயிரிழந்த மருத்துவர் இரண்டாவது நபராக உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா வைரஸின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அசாமில் 32 பேருக்கும், மணிப்பூரில் இரண்டு பேருக்கும், திரிபுராவில் இரண்டு பேருக்கும், நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவருக்கும் தொற்று உள்ளது.

மருத்துவர் ரின்டாதியாங், கடந்த சில நாள்களாக எந்த வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்ளாமல் இருந்தும் அவருக்கு வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் மருமகன், ஏர் இந்தியாவில் விமான ஓட்டியாகப் பணிபுரிந்துள்ளார். அவர், கடந்த மார்ச் மாதம் 16 - ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்து, அங்கிருந்து 24 -ம் தேதி ஷில்லாங் வந்தடைந்தார். உயிரிழந்தவரின் உறவினர்களில் ஒருவர், கோவிட்-19 அதிகம் பரவியுள்ள நாட்டிற்குச் சென்றுவிட்டு 14 -ம் தேதி ஊரடங்கு முடிவதற்கு முன்பு வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார், மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா.

மருத்துவர்
மருத்துவர்

மேலும் அவர் கூறுகையில், ‘வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் சில நேரங்களில் அவர்களுக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாததைக் காணமுடிகிறது. எனவே, மருத்துவரின் மருமகன் மூலம் ரின்டாதியாங்குக்கு தொற்று பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது எப்படி நடந்தது என்று எல்லா கோணங்களிலும் விசாரித்துவருகிறோம்’ என்றார்.

உயிரிழந்த நபருடன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 2000 நபர்களைக் கண்டறிந்துள்ளது மேகாலயா அரசு. கிட்டத்தட்ட முதன்மைத் தொடர்பில் இருந்த 90 நபர்களுக்கு கோவிட்-19 டெஸ்ட் தற்போது செய்துள்ளது. ஷில்லாங்கைச் சேர்ந்த வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய மருத்துவ நிறுவனம் மட்டுமே மேகாலயாவில் உள்ள ஒரே கோவிட்-19 சோதனை மையம். எனவே, 2000 ரத்த மாதிரிகளைச் சோதிக்க மேகாலயா அரசு அஸ்ஸாமிடம் உதவி கேட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

எங்கள் முதற்கட்ட நடவடிக்கையாக, 2000 நபர்களைச் சோதனை செய்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, நோய்த்தொற்று பரவுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதே என இன்று மேகாலயா முதல்-மந்திரி சட்டசபைக் கூட்டத்தில் கூறியுள்ளார். தொற்றால் இறந்தவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனையின் இரண்டு கிளைகளும் முற்றிலுமாக மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் வேலையாட்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேகாலயா அரசு, பெத்தானி மருத்துவமனைக்கு மார்ச் 22 அல்லது அதற்குப் பிந்தைய நாள்களில் அங்கு சென்றுவந்தவர்கள், தாமாகவே முன்வந்து அவசர ஊர்தி எண்ணை அழைத்தோ அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் கூறியோ தங்களின் பெயரைப் பதிவுசெய்துகொண்டு, கொரோனா தொற்று பரிசோதனை செய்யுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

மூச்சுத் திணறல்; நீல நிறத்தில் மாறிய உடல்! - குழந்தையைக் காக்க பைக்கை ஆம்புலன்ஸாக்கிய மருத்துவர்
அடுத்த கட்டுரைக்கு