Published:Updated:

`டியர் அமித் ஷா; இப்படிக்கு இல்டிஜா முப்தி’ - மெகபூபா முப்தி மகளின் வேதனை கடிதம்

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு 10 நாள்கள் ஆகிவிட்டன. மக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து வெளிவரவில்லை. காரணம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 மெகபூபா முப்தி மகள் இல்டிஜா முப்தி
மெகபூபா முப்தி மகள் இல்டிஜா முப்தி ( Twitter/@ajay_nandy )

காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்த பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்னரே காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டனர். இது தொடர்பாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

 மெகபூபா முப்தி
 மெகபூபா முப்தி

அவர்களை வெளியே இருந்து யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டாலும், சிறைவைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியே வரவில்லை. மேலும், மத்திய அரசின் தரப்பிலும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் தரப்பிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விஷயம், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் இளைய மகள் இல்டிஜா முப்தி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாகவே அவர், தன் தாயை சந்திக்கவிடவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார். அப்போது அவர், ``காவலில் வைக்கப்பட்டுள்ள என் அம்மாவைச் சந்திக்க வேண்டும் என பலமுறை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அவர்கள் எனக்கு அனுமதி தர மறுத்தனர். ஒரு மகளான நான் என் தாயைக்கூட சந்திக்கக் கூடாதா. என்னைச் சந்திக்கவும் யாரையும் அனுமதிப்பதில்லை. நான் சாதாரண காஷ்மீரி பெண், இந்தியக் குடிமகள் அவ்வளவுதான். அரசியலில் ஈடுபடாத என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இல்டிஜா முப்தி
இல்டிஜா முப்தி

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இல்டிஜா முப்தி எழுதிய கடிதத்தில், ``நான் ஏன் காவலில் உள்ளேன் என்பதைத் தெரிந்துகொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலன்தரவில்லை. அதனால் வேறுவழியே இல்லாமல் தான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் எனது அடிப்படை உரிமை குறித்து கேள்வி எழுப்புவதன் காரணமாகத் தண்டிக்கவோ, கைது செய்யப்படவோ மாட்டேன் என நம்புகிறேன்.

காஷ்மீரை தற்போது கரும் மேகங்கள் சூழ்ந்துள்ளன. காஷ்மீர் விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசுபவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்கிறேன். மத்திய அரசின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டப் பின்னர் காஷ்மீர் மக்கள் விரக்தியில் உள்ளனர். என் அம்மாவும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, மற்ற மக்கள் பிரதிநிதிகளுடன் காவலில் இருக்கிறார்.

மரியாதையுடன் நான் காஷ்மீர் மக்களுக்காகப் பேசியதற்காக நான் ஏன் தண்டிக்கப்படுகிறேன்? நாங்கள் அனுபவிக்கும் வலி, வேதனைகளை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?
அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் இல்டிஜா முப்தி

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு 10 நாள்கள் ஆகிவிட்டன. மக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து வெளிவரவில்லை. காரணம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது மக்களை பலவீனப்படுத்தும் முயற்சி. இன்று (நேற்று) நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் வேளையில் காஷ்மீர் மக்கள் மட்டும் விலங்குகளைப்போல கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு நன்குத் தெரிந்த காரணத்துக்காக நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். என்னை வீட்டுக்குக் காண வரும் நபர்கள் குறித்த தகவலும் எனக்குத் தெரிவிக்கவில்லை. என்னை வெளியேறவும் அனுமதிக்கவிலை. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எப்போதும் சட்டத்தை மதிக்கும் குடிமகளாகத்தான் இருந்துள்ளேன்.

Mehbooba Mufti
Mehbooba Mufti

நான் பல்வேறு ஊடகங்களுக்கும் இணையத்திலும் அளித்த பேட்டிகளை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்திருப்பார்கள். அதுவே நான் காவலில் இருக்க காரணம் என்கிறார்கள். நான் மீண்டும் பேசினால் அதன் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்றுகூட மிரட்டப்பட்டேன்.

இந்த நேர்காணல்களில் நான் தொடர்ச்சியாக சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்பாகப் பேசினேன். ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் பல்வேறு அரசியல் கைதிகளுடன் என் தாயும் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரின் பாதுகாப்பு தொடர்பாகக் கவலை தெரிவித்தேன். மரியாதையுடன் நான் காஷ்மீர் மக்களுக்காகப் பேசியதற்காக நான் ஏன் தண்டிக்கப்படுகிறேன்? நாங்கள் அனுபவிக்கும் வலி, வேதனைகளை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?

jammu kashmir
jammu kashmir

நான், எதற்காகத் தடுத்து காவல் வைக்கப்பட்டுள்ளேன் என்பதையும் எந்தச் சட்டப்பிரிவில் நான் காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிந்தால், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அல்லது நான் சட்ட உதவியை நாட வேண்டுமா.. வயதான என் பாட்டி, அவரின் மகனை சந்திக்க அனுமதி பெற வேண்டுமா. அவரும் இங்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறாரா?

`மாஸ் காட்டும் ஜெய்சங்கர்!’ - காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்படும் பாகிஸ்தான்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு நடக்கும் அடக்குமுறைகள் குறித்து பேசுவதற்கு ஒரு குடிமகளுக்கு உரிமை இல்லையா. உண்மையே வெல்லும் என்பதுதான் இந்த நாட்டை, அரசியலமைப்பை வழிநடுத்தும் சக்தி. ஆனால், நான் உண்மையைப் பேசுவதால் ஒரு போர்குற்றவாளி போன்று நடத்தப்படுகிறேன். இது மிகப்பெரிய முரண்.

இந்தக் கடிதத்தை தபால் மூலம் உங்களுக்கு அனுப்ப முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இங்கு தபால் சேவையும் முடக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன். உண்மை மேலோங்கட்டும்.

இப்படிக்கு

இல்டிஜா முப்தி”

இல்டிஜா முப்தி எழுதிய கடிதம்!
இல்டிஜா முப்தி எழுதிய கடிதம்!

இப்படியாக முடிகிறது அந்த கடிதம். இதைத் தொடர்ந்து காஷ்மீர் தொடர்பான உண்மை நிலவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.