Published:Updated:

`13 வயதில் குடும்ப பொறுப்பு, மென்மையான குரல் என நிராகரிப்பு!' - லதா மங்கேஷ்கரின் இசைப்பயணங்கள்

லதா மங்கேஷ்கர்

தனது 80 ஆண்டுக்கால திரையிசை வாழ்க்கையில் மூன்று தேசிய விருதுகள், 15 பெங்காலி பட விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள், பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதோடு 1989-ம் ஆண்டு தாதாசாஹேப் பால்கே விருதையும், 2007-ம் ஆண்டு பிரான்ஸ் குடியுரிமை விருதையும் பெற்றார்.

`13 வயதில் குடும்ப பொறுப்பு, மென்மையான குரல் என நிராகரிப்பு!' - லதா மங்கேஷ்கரின் இசைப்பயணங்கள்

தனது 80 ஆண்டுக்கால திரையிசை வாழ்க்கையில் மூன்று தேசிய விருதுகள், 15 பெங்காலி பட விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள், பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதோடு 1989-ம் ஆண்டு தாதாசாஹேப் பால்கே விருதையும், 2007-ம் ஆண்டு பிரான்ஸ் குடியுரிமை விருதையும் பெற்றார்.

Published:Updated:
லதா மங்கேஷ்கர்

இந்திய சினிமாவின் `நைட்டிங்கேல்' எனக் கொண்டாடப்படும் லதா மங்கேஷ்கர், கொரோனாவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 92 வயதான இந்த இசைக் குயிலின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, கானங்களுடன் பல ஆச்சர்யங்களும் நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கின்றன.

லதா மங்கேஷ்கர் இசைத்துறைக்கு வந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வாகவே கருதப்படுகிறது. 1929-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பிறந்தார் லதா மங்கேஷ்கர். அவரின் தந்தை பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் ஓர் இசைக்கலைஞர். அவர் லதா மங்கேஷ்கருக்கு இளம் வயதிலேயே இசை கற்றுக்கொடுத்தார். என்றாலும், தன் மகளை இசைப்பள்ளியிலும் சேர்த்துவிட்டார்.

சகோதரி ஆஷா போஸ்லேவுடன் லதா மங்கேஷ்கர்
சகோதரி ஆஷா போஸ்லேவுடன் லதா மங்கேஷ்கர்
Instagram Photo: @asha.bhosle

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் நாளில் லதா மங்கேஷ்கர் மற்ற குழந்தைகளுக்கு இசை குறித்து பாடம் எடுத்தார். இதனை தடுத்து நிறுத்தி ஆசிரியர் திட்டியதால் அதன் பிறகு இசைப்பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு தன் தந்தையிடமே லதா இசையைக் கற்றுக்கொண்டார். அதோடு தீனநாத்தின் நாடகங்களில் லதா மங்கேஷ்கர் தனது 5வது வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தார்.

1942-ம் ஆண்டு லதா மங்கேஷ்கருக்கு 13 வயதாக இருந்த போது அவரின் தந்தை திடீரென மரணம் அடைந்ததால் குடும்பத்தின் பொறுப்பு லதா மங்கேஷ்கரிடம் வந்தது. குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீனநாத்தின் நண்பர் மாஸ்டர் விநாயக், லதா மங்கேஷ்கர் குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதோடு லதா மங்கேஷ்கருக்கு படங்களில் நடிக்க சிறிய வேடங்களைக் கொடுப்பதாக கூறினார். இதனால் லதா மங்கேஷ்கர் மும்பைக்கு வந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும், அவருக்கு நடிப்புத் துறை பிடிக்கவில்லை. ஏற்கெனவே தன் தந்தையிடம் இசை பயின்று இருந்த லதா மங்கேஷ்கர் பாடல் பாடுவதில் ஆர்வம் காட்டினார்.

1943-ம் ஆண்டு `கஜாபாவ்' என்ற மராத்தி படத்தில் லதா மங்கேஷ்கர் முதன்முறையாகப் பாடினார். 1948-ம் ஆண்டு அவருக்கு வாழ்வு கொடுத்த விநாயக் மறைய, மற்றோர் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் லதா மங்கேஷ்கரை தயாரிப்பாளர் சஷாதர் முகர்ஜியிடம் அறிமுகப்படுத்தினார். ஆனால் லதாவின் குரல் மிகவும் மென்மையாக இருப்பதாக கூறி முகர்ஜி நிராகரித்துவிட்டார்.

லதா மங்கேஷ்கருடன் சுரேஷ் கிருஷ்ணா
லதா மங்கேஷ்கருடன் சுரேஷ் கிருஷ்ணா

இதனால் குலாம் ஹைதர் தனது படங்களில் பாட லதாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார். குலாம் ஹைதரை தன் தெய்வமாக லதா மங்கேஷ்கர் கருத இதுவே காரணம். 1949-ம் ஆண்டு `மஹால்' படத்தில் அவர் பாடிய பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. பாடுவதற்கு நேரம்தான் கிடைக்கவில்லை.

தனது 80 ஆண்டுக்கால திரையிசை வாழ்க்கையில் மூன்று தேசிய விருதுகள், 15 பெங்காலி பட விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள், பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். அதோடு 1989-ம் ஆண்டு தாதாசாஹேப் பால்கே விருதையும், 2007-ம் ஆண்டு பிரான்ஸ் குடியுரிமை விருதையும் பெற்றார்.

சினிமாவில் பழம்பெரும் நடிகை மதுபாலா முதல் சமீபத்திய பிரியங்கா சோப்ரா வரையிலானவர்களுக்காக பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் இசையமைப்பாளர்கள் மதன் மோகன், லட்சுமிகாந்த் பியாரிலால், ஆர்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்களின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் மட்டும் 700 பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி தொடர்பான பாடலை பாடியதுதான் அவர் கடைசியாகப் பாடிய பாடல்.

1999-ம் ஆண்டிலிருந்து 2005-ம் ஆண்டு வரை லதா மங்கேஷ்கர் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

லதாவின் இசை சேவைக்காக 2001-ம் ஆண்டு பாரத் ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டது. தமிழில் `சத்யா' படத்தில் `வளையோசை கலகலகலவென', மற்றும் `செண்பகமே செண்பகமே', `ஆராரோ ஆராரோ', `எங்கிருந்தோ அழைக்கும்' போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்திய இசை ரசிகர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்ட லதா மங்கேஷ்கரின் தனித்த குரல் எப்போதும் கசிந்துகொண்டிருக்கும் நம் ப்ளேலிஸ்டில்!