டெல்லி உயர் நீதிமன்றத்தில், பெண்கள் நலச் செயற்பாட்டாளர்களால், மெரைட்டல் ரேப் (Marital Rape)க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது விசாரணை நடந்துவருகிறது. அப்போது, திருமணத்திற்குப் பின் மனைவியின் அனுமதி இல்லாமல் கணவர் அவருடன் கட்டாய உறவு கொள்வதை தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருத மனுதாரர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் மீதான விவாதம் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், மெரைட்டல் ரேப்பை சட்டப்படி குற்றமாக்குவதை எதிர்த்து ஆண்கள் #MarriageStrike ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகளவில், திருமணத்திற்குப் பின் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவருடன் கட்டாய உறவு கொள்வது சட்டப்படி குற்றம் இல்லை என்று கூறும் 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, மனைவியின் வயது 18-க்கு கீழ் இல்லையென்றால், அவர் சம்மதம் இல்லாமலும் அவருடன் உறவுகொள்வது சட்டப்படி குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், இதில் சட்டத் திருத்தம் வேண்டியும் மனுதாரர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதன் மீதான நீதிமன்ற விவாதத்தில், குறிப்பிட்ட இந்தச் சட்டப் பிரிவின் மூலம் மனைவி மீது கணவன் உடலளவில் ஆதிக்கம் செலுத்தும் சூழல்கள் பற்றியும், எனவே இந்தச் சட்டம், கணவனால் மனைவி துன்புறுத்தப்படும்போது அந்தக் கணவனைக் காக்கும் கருவியாகச் செயல்படாத வகையில் திருமணமான பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மனைவியின் சம்மதம் இல்லாமல் கட்டாய உறவுகொள்ளும் கணவன் தண்டனைக்குரியவர் என்பதை சட்டத்திருத்தம் மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, `சேவ் இந்தியன் ஃபேமிலி ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பைச் சேர்ந்த அணில் குமார், திருமணமான ஆண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த #MarrigeStrike என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். அது பலராலும் பகிரப்பட, ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து அணில் குமார், ``ஏற்கெனவே இந்தியாவில் ஓர் ஆண் திருமணம் செய்துகொள்வது கடினமான காரியமாக உள்ள சூழலில், இதுபோன்ற சட்டத் திருத்தம், மனைவி கணவரை பழிவாங்கப் பயன்படுத்தப்படும். எனவே, ஆண்கள் திருமணத்தை தவிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்று தெரிவித்தார்.

இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வர, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், ``திருமணத்துக்குப் பின் மனைவியை மெரைட்டல் ரேப் செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக சட்டப்படி வரையறுப்பது வரவேற்கப்பட வேண்டியது. காலம் காலமாக இந்தியப் பெண்கள் அனுபவித்து வரும் இந்த மனித உரிமை மீறலுக்கு, சட்டத்திருத்தம் தீர்வு கொண்டுவரும்; பெண்களின் மனித உரிமையை பாதுகாக்கும்'' என்று வரவேற்று உள்ளனர்.