Published:Updated:

மனநலம் குன்றி மாயமானவர்; இறந்ததாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்- குணமடைந்து வீடு திரும்பிய அதிசயம்!

குடும்பத்தோடு சஞ்சய் (டீஷர்ட் அணிந்திருப்பவர்)

கேரளாவில் சுற்றிக்கொண்டிருந்த சஞ்சயை, ஒரு மனநல சிகிச்சை மைய ஊழியர்கள் மீட்டு தங்கள் மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர்.

மனநலம் குன்றி மாயமானவர்; இறந்ததாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்- குணமடைந்து வீடு திரும்பிய அதிசயம்!

கேரளாவில் சுற்றிக்கொண்டிருந்த சஞ்சயை, ஒரு மனநல சிகிச்சை மைய ஊழியர்கள் மீட்டு தங்கள் மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர்.

Published:Updated:
குடும்பத்தோடு சஞ்சய் (டீஷர்ட் அணிந்திருப்பவர்)

பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல்போய்விட்டார். இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. வழக்கமாக அடிக்கடி காணாமல்போய்விட்டு, மீண்டும் அவரே வீட்டுக்கு வந்துவிடுவார். ஆனால் கடைசியாக காணாமல்போன பிறகு வீடு திரும்பவில்லை. அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் போலீஸார் ஒருவரின் உடலைக்காட்டி இது சஞ்சய்தானா என்று அடையாளம் காட்டும்படி அவர் குடும்பத்திடம் கேட்டுக்கொண்டனர். முகம் அடையாளம் காண முடியாமல் இருந்தது. அதோடு கொரோனா கட்டுப்பாடுகளும் இருந்தன. இதனால் அவர்தான் சஞ்சய் என்று அவர் குடும்பத்தினர் கூறினர். அதோடு உடலை வாங்கி வந்து தகனமும் செய்துவிட்டனர்.

குடும்பத்தோடு சஞ்சய்(டிசர்ட் அணிந்திருப்பவர்)
குடும்பத்தோடு சஞ்சய்(டிசர்ட் அணிந்திருப்பவர்)

இந்த நிலையில், சஞ்சயை அவர் குடும்பத்தினர் உயிரோடு பார்த்து ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். இது குறித்துப் பேசிய சஞ்சய் தந்தை நந்தலால், ``சஞ்சய் நன்றாகப் படிக்கக்கூடியவன். அவன் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்தபோது அவனது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. இதனால் அவனை ராஞ்சி மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தோம். சஞ்சய் அடிக்கடி காணாமல்போய்விட்டு, வீட்டுக்கு வந்துவிடுவான். கடைசியாக காணாமல்போய் அதிக நாள்கள் ஆனதால் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். திடீரென போலீஸார் கொரோனா காலத்தில் ஒரு உடலைக் கொண்டுவந்து காட்டினர். நாங்களும் அது சஞ்சய் என்று கருதி தகனம் செய்து இறப்புச் சான்றிதழும் வாங்கிவிட்டோம்" என்று தெரிவித்தார்.

காணாமல்போன சஞ்சய் பாட்னாவிலிருந்து ரயில் மூலம் கேரள மாநிலம், காசர்கோடுக்குச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மனநல சிகிச்சை மைய ஊழியர்கள் சஞ்சய் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்து தங்கள் மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர். மகாராஷ்டிரா மாநிலம், கர்ஜத்திலும் இது போன்ற ஒரு மறுவாழ்வு மையம் செயல்பட்டுவந்தது. அந்த மையத்தை பீகாரைச் சேர்ந்த டாக்டர் பரத் வத்வானி நடத்திவந்தார். சஞ்சையும் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் அவரை கர்ஜத் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைத்தனர். கர்ஜத் முகாமில் சஞ்சய் முழுமையாக குணமடைந்தார். அவரை அவர் உறவினர்களோடு சேர்க்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொபைல் நம்பரும் இல்லை.

காணாமல்போன போதும்...  மீட்கப்பட்ட பிறகும்
காணாமல்போன போதும்... மீட்கப்பட்ட பிறகும்

அவர் கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் அவர் பாட்னாவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்தனர். உடனே அவரை அவர் குடும்பத்தோடு சேர்த்துவைக்க குர்லாவிலிருந்து அஜய் என்பவர் சஞ்சயை அழைத்துச் சென்றார். இது குறித்து அஜய், ``நாங்கள் பாட்னாவில் இறங்கி வீட்டுக்குச் செல்லும்போது தனது வீட்டுக்கு அருகில் மாவு மில் ஒன்று இருக்கிறது என்று சொன்னார். நாங்கள் அங்கு சென்றபோது மாவு மில் இன்னும் இருந்தது. சஞ்சய், அவர் குடும்பத்தோடு சேர்ந்த தருணம் கண்ணில் நீரை வரவழைப்பதாக இருந்தது. அவரின் இரண்டு குழந்தைகள், மனைவியை அடையாளம் கண்டுகொண்டார்" என்று தெரிவித்தார்.

சஞ்சய் தன் குடும்பத்தாரோடு அதிகமாகப் பேசவில்லை. ஆனால் அவரை இனித் தனியாக எங்கும் விட மாட்டோம் என்று சஞ்சயின் தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்தார். சாத் பூஜா தினத்தன்று சஞ்சய் எங்களுக்குத் திரும்ப கிடைத்திருக்கிறார் என்று நந்தலால் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.