Published:Updated:

சீன விவகாரம்: சோனியா குடும்பத்தின் 3 அறக்கட்டளைகள்! - விசாரணை நடத்தக் குழு அமைத்த உள்துறை

சோனியா காந்தி குடும்பம்
சோனியா காந்தி குடும்பம்

சோனியா காந்தியின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் 3 அறக்கட்டளைகள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், இந்தியா - சீனா எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றது. இந்தத் தாக்குதலில் இரு நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு தரப்பிலும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எல்லை பிரச்னை தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசை, ராகுல் காந்தியும் காங்கிரஸும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

ஜே.பி நட்டா
ஜே.பி நட்டா

காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும்விதமாகவும் அவர்களைக் குறைகூறும் விதமாகவும் சமீபத்தில் பா.ஜ.க-வின் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா, “ 2005 - 06-ம் ஆண்டில் மக்கள் சீன குடியரசு மற்றும் சீன தூதரகத்திடமிருந்து, ராஜீவ்காந்தி அறக்கட்டளை 3 லட்சம் அமெரிக்க டாலர்களைப் பெற்றது எனக்கு மிகவும் ஆர்ச்சர்யமாக உள்ளது. அனைத்தும் ஹவாலா பரிமாற்றமாக இருந்துள்ளது. காங்கிரஸுக்கும் சீனாவுக்கும் இடையே ரகசிய உறவு இருந்தது. 2017-ம் ஆண்டு நடந்த டோக்லாம் பிரச்னையின்போது ராகுல் காந்தி, சீன தூதருடன் ரகசியமாகப் பேசினார். தற்போது நடக்கும் பிரச்னையிலும் காங்கிரஸ் நாட்டை தவறாக வழிநடத்துகிறது” எனப் பேசியிருந்தார்.

நட்டாவின் கருத்தை முற்றிலும் மறுத்த காங்கிரஸ், சீனாவிடமிருந்து முறைப்படிதான் நன்கொடை பெறப்பட்டதாகவும் அதை இந்தியாவில் மக்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில், சோனியா காந்தி குடும்பத்தினரால் நடத்தப்பட்டுவரும் 3 அறக்கட்டளைகள் தொடர்பாக விசாரணை நடத்தக் குழு ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை
ராஜீவ் காந்தி அறக்கட்டளை

காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினரால் ராஜீவ்காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ்காந்தி அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளை, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஜீவ்காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய இரண்டுக்கும் சோனியா காந்திதான் தலைவராக உள்ளார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 3 அறக்கட்டளைகளும் வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதி, நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்தத்தான் குழு அமைத்துள்ளது மத்திய அரசு.

` ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எதிர்கால ஆய்வுப் பட்டியல்!’ - மோடியை விமர்சிக்கும் ராகுல்

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `ராஜீவ்காந்தி அறக்கட்டளை, ராஜீவ்காந்தி நினைவு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA), வருமான வரி சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) , பல்வேறு சட்ட விதிகளை மீறுவது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது. அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருப்பார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தச் செயலை காங்கிரஸார் கடுமையாகக் கண்டித்துள்ளனர். சீன விவகாரத்தைத் திசை திருப்ப மிகவும் மோசமாக தங்கள் மீது பழிசுமத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ உலகம் தன்னைப் போன்றது என மோடி நம்புகிறார். ஒவ்வொன்றுருக்கும் ஒரு விலை இருப்பதாகவும் அல்லது மிரட்டலாம் என்றும் நினைத்துள்ளார். சத்தியத்துக்காகப் போராடுபவர்களுக்கு விலை இல்லை. மிரட்ட முடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு