Published:Updated:

`பொதுப் போக்குவரத்து... ஆன்லைன் விற்பனை!’ - லாக்டௌன் 4.0... என்னென்ன தளர்வுகள் இருக்கும்?

லாக்டௌன் இந்தியா
லாக்டௌன் இந்தியா

மூன்றாம் கட்ட பொது முடக்கம் வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் நான்காம் கட்டமாகப் புதிய விதிமுறைகளுடன் அது நீட்டிக்கப்பட இருக்கிறது.

`பெருந்தொற்று’ கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. மூன்றாம் கட்டமாக இது மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பொதுமுடக்கம் புதிய விதிமுறைகளுடன் மே 17-க்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்றும் இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

சென்னை பட்டாபிராமில்  குடை பிடித்தபடி சமூக இடைவெளியுடன் மளிகைப் பொருள்கள் வாங்க காத்திருக்கும் மக்கள்.
சென்னை பட்டாபிராமில் குடை பிடித்தபடி சமூக இடைவெளியுடன் மளிகைப் பொருள்கள் வாங்க காத்திருக்கும் மக்கள்.

அதன்படி நான்காம் கட்ட பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் இருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். குறிப்பாக, பொதுப்போக்குவரத்தைக் குறைவான அளவிலான பயணிகளுடன் அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், உள்நாட்டு விமான சேவையும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயக்கப்படும் என்கிறார்கள். டெல்லி - மும்பை உள்ளிட்ட ஒருசில வழித்தடங்களில் மட்டுமே முதற்கட்டமாக விமான சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.

``லாக்டௌன் தளர்வின் பாசிட்டிவ் நெகட்டிவ் பக்கங்கள்!" - விளக்கும் வைராலஜிஸ்ட் #ExpertOpinion

அதேநேரம், பாதிப்புகளின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் போன்றவற்றில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள், உற்பத்தி சார்ந்த தொழில்கள் போன்றவற்றில் குறைந்த அளவிலேயே தளர்வுகள் இருக்கும் என்கிறார்கள். அதேநேரம், அத்தியாவசியமற்ற பொருள்களின் ஆன்லைன் விற்பனை சிவப்பு மண்டலங்களிலும் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

லாக்டௌன்
லாக்டௌன்
AP |Rajesh Kumar Singh

சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்பதைவிட எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே லாக்டௌன் 4.0 தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் மூத்த அதிகாரிகள். அதனால், மேற்குறிப்பிட்ட மண்டலங்கள் எந்தெந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் அனுமதி இல்லை என்று உள்துறை அமைச்சகம் பட்டியலிடும். அதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியில் மற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம். பொதுவாக நாடு தழுவிய அளவில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு க்ரீன் சிக்னல் கொடுக்கும் என்றே தெரிகிறது.

20 லட்சம் கோடி ரூபாய்; நான்காம் கட்ட ஊரடங்கு; என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? #VikatanExplainer

சிவப்பு மண்டலங்களில் பொதுப்போக்குவரத்துக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. அதேநேரம், சிவப்பு மண்டலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் 33 சதவிகிதப் பணியாளர்களுடனும் அரசு அலுவலகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ள நிலையில், இதில் சில தளர்வுகளைக் கொண்டு வரவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அளவிலான பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கத்துக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா லாக்டௌன்
கொரோனா லாக்டௌன்

இதற்காக, மத்தியத் தொழில்பாதுகாப்புப் படை வீரர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராகிவிட்டனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை தெர்மல் ஸ்கேனிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பயணிகளின் உடல் வெப்பநிலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் நிலையில், அதைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிவப்பு மண்டலங்களில் வணிக வளாகங்கள் மற்றும் சலூன் கடைகள் ஆகியவை லாக்டௌன் 4.0-விலும் மூடப்பட்டிருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு