டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதிகாலை பயிற்சியினைத் தொடங்கும் இவர்கள் 8 மணியிலிருந்து 8.30 வரை பயிற்சி எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி அரசு நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் தம்பதிகளான சஞ்சீவ் கிர்வார் மற்றும் மனைவி ரிங்கு டுஹா இருவரும் மைதானத்தில் பயிற்சி எடுக்கும் வீரர்களை பயிற்சி எடுக்கவிடாமல் இடையூறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஐஏஎஸ் தம்பதிகளான இருவரும் தங்கள் நாயுடன் நடைப்பயிற்சி செல்லவதற்காக வழக்கமாக காலை 8.30 மணிவரை பயிற்சி எடுக்கும் வீரர்களை 7மணிக்கே முடித்துவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஐஏஎஸ் தம்பதிகளான இருவரும் தங்கள் நாயுடன் நடைப்பயிற்சி செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது.

இதையடுத்து ஐஏஎஸ் தம்பதிகளான இருவர் மீதும் புகார்கள் எழுந்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சஞ்சீவ் கிர்வார் மற்றும் மனைவி ரிங்கு டுஹா இருவரையும் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன்படி சஞ்சீவ் கிர்வார் லடாக் பகுதிக்கும், அவரது மனைவி ரிங்கு டுஹா அருணாச்சலப்பிரதேசத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் "டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 10 மணிவரை பயிற்சி செய்யலாம்" என அறிவித்தார்.
