Published:Updated:

`இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, மிக மோசமானது!’ -குடியுரிமை சட்டத்தைச் சாடிய மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ

சி.இ.ஓ சத்ய நாதெள்ளா
சி.இ.ஓ சத்ய நாதெள்ளா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டம் குறித்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார்.

`குடியுரிமை சட்டத் திருத்தம்’ -கடந்த ஒரு மாதமாக இந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசாதவர்களே இருக்க முடியாது. 1955-ம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, தற்போது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்தியக் குடியுரிமையை வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

குடியுரிமைப் போராட்டம்
குடியுரிமைப் போராட்டம்

இது மதத்தின் அடிப்படையில் உள்ளதாகவும் மதச்சார்பின்மை என்னும் இந்தியாவின் அடிப்படையையே சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வருகின்றன. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

இந்நிலையில் நேற்று நியூயார்க், மன்ஹாட்டனில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, இந்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை விமர்சித்த முதல் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி இவர்தான். BuzzFeedNews செய்தி நிறுவனத்தின் தலைமை எடிட்டர் பென் ஸ்மித், சத்ய நாதெள்ளா கூறியதை மேற்கோள்காட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ``இந்தியாவில் தற்போது எது நடந்துகொண்டிருக்கிறதோ அது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. அது மோசமானது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் குடியேறி அடுத்த யூனிகார்னைத் தயாரிப்பதையோ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மைக்ரோ சாஃப்ட் இந்தியா வெளியிட்டுள்ள சத்ய நாதெள்ளாவின் அறிக்கையில், `ஒவ்வொரு நாடும் தன் எல்லைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும், அப்படித்தான் செய்துகொள்ளும். அதன்படியே தேசியப் பாதுகாப்பை உறுதி செய்து குடியேற்ற விதிமுறைகளை வகுக்கும்.

அதே ஜனநாயக நாடுகளில், மக்களும் அவர்களின் அரசுகளும் எல்லை பற்றி விவாதித்து வரையறுத்துக்கொள்வார்கள். நான் எனது இந்தியப் பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன். பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய அனுபவம் பெற்றுள்ளேன். எனது நம்பிக்கை என்னவென்றால், வெளிநாட்டில் குடியேறிய ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்குவது அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தைத் தலைமையேற்று இந்தியப் பொருளாதாரத்துக்குப் பயனுள்ளதாக மாறுவதைப் பார்க்க விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சத்ய நாதெள்ளா. இவர் ஹைதராபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார். கர்நாடகாவின் மணிப்பாலில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து ஹைதராபாத்தில் கணினி அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைப் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே மைக்ரோ சிஸ்டமில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

பின்னர் 1992-ம் ஆண்டு மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து தற்போது அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக பணியாற்றி வருகிறார். சத்ய நாதெள்ளா அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே குடிபெயர்ந்து விட்டார்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் சத்ய நாதெள்ளாவின் கருத்தை வரவேற்றுள்ளனர். இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, ``சத்ய நாதெள்ளா தான் நினைத்ததை வெளிப்படையாகக் கூறியதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதைச் சொல்ல முதலில் நம் நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனர்களில் ஒருவருக்குத் தைரியமும் ஞானமும் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அல்லது இப்போதாவது வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு